14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 9-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.
ரோகித் சர்மா 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில் வெளியேறினார். குவிண்டன் டிகாக் 40 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் பொல்லார்ட் 3 சிக்சர், 1 பவுண்டரியுடன் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது.
ஐதராபாத் சார்பில் முஜீப், விஜயசங்கர் தலா 2 விக்கெட், கலீல் அகமது 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 151 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியின் டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 43 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய மணீஷ் பாண்டே 2 ரன்னிலும், வார்னர் 36 ரன்னிலும், விராட் சிங் 11 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரில் 2 விக்கெட் வீழ்ந்தது. 6 ரன்கள் மடடுமே கிடைத்தது. 19வது ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. அதிரடியாக ஆடிய விஜயசங்கர் 28 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், ஐதராபாத் அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது.
மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.