TAMIL
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் சரிவை சமாளித்தது மும்பை அணி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இதில் தமிழ்நாடு-மும்பை (பி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஒரு கட்டத்தில் 129 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஜெய் பிஸ்தா (41 ரன்கள்), பூபென் லால்வானி (21 ரன்), சித்தேஷ் லாத் (0), ஹர்திக் தமோர் (21 ரன்), சர்ப்ராஸ் கான் (36 ரன்) ஆகியோர் தமிழக சுழற்பந்து வீச்சாளர்கள் சாய் கிஷோர், ஆர்.அஸ்வினின் மாயாஜால சுழலில் சிக்கி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தனர்.
இதனால் மும்பை அணி விரைவில் அடங்கிவிடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
6-வது விக்கெட்டுக்கு ஷம்ஸ் முலானி, கேப்டன் ஆதித்ய தாரே ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்ததுடன் அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர்.
அணியின் ஸ்கோர் 284 ரன்னாக உயர்ந்த போது ஷம்ஸ் முலானி (87 ரன்கள், 158 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆர்.அஸ்வின் பந்து வீச்சில் பாபா அபராஜித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
6-வது விக்கெட்டுக்கு முலானி-ஆதித்ய தாரே இணை 155 ரன்கள் திரட்டியது.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 89.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆதித்ய தாரே 117 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளார்.
தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர், ஆர்.அஸ்வின் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
சவுராஷ்டிரா-கர்நாடகா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் ராஜ்கோட்டில் நடக்கிறது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்னெல் பட்டேல் (16 ரன்), ஹர்விக் தேசாய் (13 ரன்) ஆகியோர் ஜெகதீஷா சுஷித் பந்து வீச்சில் விரைவில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள்.
3-வது விக்கெட்டுக்கு ஷெல்டன் ஜாக்சன், புஜாராவுடன் இணைந்தார். இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
நிலைகொண்டு ஆடிய புஜாரா சதம் அடித்து அசத்தினார். முதல் தர போட்டியில் (டெஸ்ட் போட்டியும் சேர்த்து) புஜாரா அடித்த 50-வது சதம் இதுவாகும்.
இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டியில் 50 சதங்கள் அடித்த 9-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெற்றார்.
இதற்கு முன்பு இந்தியாவை சேர்ந்த கவாஸ்கர் (81 சதங்கள்), சச்சின் தெண்டுல்கர் (81), ராகுல் டிராவிட் (68), விஜய் ஹசாரே (60), வாசிம் ஜாபர் (57), வெங்சர்க்கார் (55), வி.வி.எஸ்.லட்சுமண் (55), முகமது அசாருதீன் (54) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டி உள்ளனர்.
நேற்றைய ஆட்டம் முடிவில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்த்தது.
புஜாரா 162 ரன்னுடனும் (238 பந்து, 17 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷெல்டன் ஜாக்சன் 99 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
கேரளா-பஞ்சாப் அணிகள் மோதும் லீக் ஆட்டம் கேரள மாநிலத்தில் உள்ள தும்பாவில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் கேரளா அணி 75.2 ஓவர்களில் 227 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
அதிகபட்சமாக சல்மான் நிசார் 91 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பஞ்சாப் அணி ஆட்ட நேரம் முடிவில் 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்தது.
புதுச்சேரியில் நேற்று தொடங்கிய புதுச்சேரி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய கோவா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது.
கேப்டன் அமித் வர்மா 113 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்.