TAMIL
ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா-ஜம்மு-காஷ்மீர் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் ஜம்முவில் நடந்தது.
முதல் இன்னிங்சில் முறையே கர்நாடக அணி 206 ரன்னும், ஜம்மு-காஷ்மீர் அணி 192 ரன்னும் எடுத்தன.
14 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய கர்நாடக அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து இருந்தது.
நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.
தொடர்ந்து ஆடிய கர்நாடக அணி 2-வது இன்னிங்சில் 106.5 ஓவர்களில் 316 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
அதிகபட்சமாக சித்தார்த் 98 ரன்கள் சேர்த்தார்.
ஜம்மு-காஷ்மீர் அணி தரப்பில் அபித் முஸ்தாக் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஜம்மு-காஷ்மீர் அணி கர்நாடக வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.4 ஓவர்களில் 163 ரன்னில் ஆட்டம் இழந்தது.
இதனால் கர்நாடக அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.
கர்நாடக அணி தரப்பில் கிருஷ்ணப்பா கவுதம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
கட்டாக்கில் நடந்த பெங்காலுக்கு எதிரான கால்இறுதி ஆட்டத்தில் கடைசி நாளான நேற்று 456 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஒடிசா அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.
முதல் இன்னிங்சில் 82 ரன்கள் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் பெங்கால் அணி வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது.
கொல்கத்தாவில் வருகிற 29-ந் தேதி தொடங்கும் அரைஇறுதிப்போட்டியில் பெங்கால் அணி, கர்நாடகாவை சந்திக்கிறது.
ஓங்கோலில் நடந்த சவுராஷ்டிராவுக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் 710 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கடைசி நாளான நேற்று 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆந்திர அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 51 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் டிராவில் முடிந்தது.
முதல் இன்னிங்சில் 283 ரன்கள் முன்னிலை பெற்ற சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
ராஜ்கோட்டில் 29-ந் தேதி தொடங்கும் அரைஇறுதியில் சவுராஷ்டிரா-குஜராத் அணிகள் மோதுகின்றன.