FOOTBALLLATEST UPDATESLEAGUESNEWSTAMIL

யாழ். வீரர்களின் திறமையை ஊக்குவிக்கவுள்ள ஜப்னா கரப்பந்தாட்ட லீக்

இலங்கையின் தேசிய விளையாட்டாக இருக்கின்ற கரப்பந்தாட்டமானது நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான கழகங்களினால் விளையாடப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்திலும் 45இற்கும் அதிகமான கழகங்கள் தற்போது கரப்பந்தாடத்தினை தொடர்ச்சியாக விளையாடி வருகின்றன.

யாழ் மாவட்ட கரப்பந்தாடட சங்கமானது ஜப்னா கரப்பந்தாட்ட லீக் என பெயரிடப்பட்டிருக்கின்ற ஏல முறையில் வீரர்கள் தெரிவு செய்யப்படும் லீக் முறையிலான போட்டித்தொடரினை முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ளனர். இந்த போட்டித்தொடரின் முதலாவது பருவக்காலத்திற்கு யாழ் மாவட்ட வீரர்கள் மாத்திரம் உள்வாங்கப்பட்டுள்ள அதேவேளை அடுத்துவரும் பருவகாலங்களில் தொடரானது வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்தும், நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் வீரர்களினை உள்வாங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலாவது பருவகாலத்திற்காக விண்ணப்பித்துள்ள 171 வீரர்களிலிருந்து 108 வீரர்கள் 09 அணிகளுக்கு, வீரர்கள் ஏலத்தின் மூலமாக தெரிவுசெய்யப்படுகின்றனர். ஒன்பது அணிகளும் யாழ் மாவட்டத்தின் வேறுபட்ட பிரதேசங்களினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்த அணிகளினை தற்போது உள்நாட்டிலும், புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகின்ற முன்னாள் கரப்பந்தாட்ட வீரர்கள், தொழில் முயற்சியாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் நலன்புரி அமைப்புக்கள் கொள்வனவு செய்துள்ளன.

ஜப்னா கரப்பந்தாட்ட லீக் தொடரினுடைய அங்குரார்ப்பண நிகழ்வானது கடந்த (17) மாலை 5 மணியளவில் அரியாலை ஜே கெஸ்ட் இல், யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ரவிவர்மனின் தலைமையில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தினை சேர்ந்த வலைப்பந்தாட்ட வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கமும், சமூக சேவகரும் கரப்பந்தாட்ட சங்க போட்டித்தொடரிற்கான அனுசரணையாளராகவும் இருக்கின்ற வாமதேவா தியாகேந்திரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்த கரப்பந்தாட்ட தொடர் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கையின் முன்னணி வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்,

“எந்தவொரு வீரரும் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுவதும், போட்டிகளில் பங்கெடுப்பதும் மிகவும் முக்கியமானதாகும். வட மாகாண வீரர்களுக்கு இந்த ஜப்னா கரப்பந்தாட்ட லீக் என்பது ஓர் வரப்பிரசாதமாக இருக்கும். இலங்கையில் கிரிக்கெட் தவிர்ந்த ஏனைய வீரர்களுக்கு போதியளவு ஊதியமோ, அனுசரணையோ கிடைப்பதில்லை. இந்த லீக் போட்டிக்கு அணி உரிமையாளர்கள் கிடைத்திருப்பதால் மிக்க மகிழ்ச்சி. எமது பிரதேச வீரர்கள் தமது திறமையினை வெளிப்படுத்தி, தேசிய அணியில் சோபிக்க வேண்டும். இந்த முயற்சி வெற்றிபெறுவதுடன், இந்த லீக் பல ஆண்டுகள் சிறப்பாக நடைபெற வேண்டும்” என்றார்.

இலங்கையில் முதலாவது முறையாக வீரர்கள் ஏலம் மூலமாக தெரிவு செய்யப்படும் கரப்பந்தாட்ட தொடர் இதுவாகும். யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்டத்தினை மீண்டும் கடந்த காலங்கள் போன்று பிரபல்யப்படுத்துவதுடன், கரப்பந்தாடத்தின் தரத்தினை உயர்த்துவதனையும் நோக்கமாக கொண்டு இந்த போட்டித்தொடரானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. “யாழ்ப்பாண மாவட்டம் முழுவதற்கும் கரப்பந்தாட்டத்தினை பரவலாக்க வேண்டும் மற்றும் கரப்பந்தாடத்தின் தரத்தினை உயர்த்த வேண்டும் எனும் நோக்கத்துடனேயே இந்த லீக் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த லீக் ஆரம்பிக்க படுவதற்கு முக்கிய பங்காளர்கள் அணி உரிமையாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள். அணி உரிமையாளர்களை அறிமுகப்டுத்தியுள்ளோம். வெகு விரைவில் அனுசரணையார்களையும் அறிமுக படுத்துவோம்.

கரப்பந்தாட்டத்தில் எமது பிரதேச வீரர்களும் அணிகளும் தேசிய ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவுள்ளது. எமக்கு தற்போதுள்ள பாரிய குறையான உள்ளக மைதானமின்மை மற்றும் தரமான பயிற்றுவிப்பாளர்களிமை ஆகியவற்றினை சம்பந்தப்படடவர்கள் விரைவில் நிவர்த்தி செய்து தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்” என யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ரவிவர்மன் குறிப்பிட்டார்.

கரப்பந்தாட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கு இந்த லீக் போட்டி மாத்திரமின்றி, பாடசாலை அணிகளிற்கிடையிலான சுற்று போட்டி, நட்புறவு ரீதியிலான போட்டிகள், கரப்பந்தாட்ட பயிற்சி நிலையங்களை செயற்படுத்துதல், கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகளினை நடத்துதல் மற்றும் மாவட்ட வீரர்கள் குழாமினை நிறுவுதல், தேர்ச்சி பெற்ற பயிற்றுவிப்பாளர்களால் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோரினை பயிற்றுவிக்கும் செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த நிகழ்வின் விருந்தினராக கலந்து கொண்டிருந்த தியாகிய அறக்கொடை நிதியத்தின் நிறுவுனரான வாமதேவ தியாகேந்திரன் “விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ச்சியாக பொருளாதார கஷ்டங்கள் இருப்பது வழமை, நான் என்னால் இயலுமான வரையில் அதனை நிவர்த்தி செய்வதற்கு தொடர்ந்து துணைநிற்பேன்” எனத் தெரிவித்தார்.

ஜப்னா கரப்பந்தாட்ட லீக் தொடரில் அணிக்கு 12 வீரர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என்பதுடன், ஏலத்துக்கு முன்னர் ஒரு வீரரை அணிகள் தக்கவைத்துக்கொள்ள முடியும். குழாத்தில் 21 வயதுக்குட்பட்ட வீரர்கள் இருவர் இருக்க வேண்டும் என்பதுடன், அதில் ஒருவர் போட்டியின் முழுநேரமும் விளையாடவேண்டும். அணியில் கட்டாயமாக லிபரோ ஒருவர் இருக்க வேண்டும். அத்துடன், ஒரு கழகத்திலிருந்து அதிகபட்சமாக மூன்று வீரர்கள் மாத்திரமே, ஒரு அணியில் விளையாட முடியும்.

போட்டி வடிவத்தை பொறுத்தவரை ஒவ்வொரு அணிகளும், எதிரணியுடன் தலா ஒவ்வொருமுறை மோதவுள்ளதுடன், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற்று, இறுதிப் போட்டியை அடையமுடியும். தொடரில் மொத்தமாக 40 போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்னா கரப்பந்தாட்ட லீக்கில் பங்கேற்கவுள்ள அணிகள்

அரியாலை கில்லாடிகள் 100

ரைசிங் ஐலண்ட்ஸ்

மட்டுவில் ஸ்பைக்கர்ஸ்

நீர்வை பசங்க

ஆவரங்கால் கிங்ஸ் பைட்டர்

சென்ட்ரல் ஸ்பைகர்ஸ் அச்சுவேலி

வல்வையூர் வொலி வொரியர்ஸ்

ஸ்புட்னிக் நோர்த் போல்ஸ்

சங்கானை மக்களொன்றிய சேலஞ்சர்ஸ்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker