CRICKETLATEST UPDATESNEWSTAMIL
மேத்யூ வேட்டுக்கு அவுட் கேட்டு அப்பீல் செய்ய தாமதமானது தவறு தான் – கேப்டன் விராட்கோலி ஒப்புதல்
இந்திய அணிக்கு எதிராக சிட்னியில் நேற்று நடந்த கடைசி 20 ஓவர் போட்டியில் 11-வது ஓவரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் வீசிய பந்து ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட்டின் காலில் தாக்கியது. இதற்கு இந்திய அணியினர் எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டனர். ஆனால் நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்தார். நடுவரின் முடிவை எதிர்த்து 15 வினாடிக்குள் டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்யலாம். அப்படி செய்யும்பட்சத்தில் 3-வது நடுவர் டெலிவிஷன் ‘ரீபிளேவை’ பார்த்து முடிவை அறிவிப்பார். ஆனால் இந்திய அணியினர் குறிப்பிட்ட நேரம் முடிந்த பிறகு தான் அப்பீல் செய்தனர். இதற்கு மேத்யூ வேட் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அந்த அப்பீலை ஏற்க நடுவர் மறுத்து விட்டார். அப்போது 50 ரன்னில் இருந்த மேத்யூவேட் 80 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். டி.ஆர்.எஸ் முறைப்படி உரிய நேரத்தில் அப்பீல் செய்யப்பட்டு இருந்தால் மேத்யூ வேட் மேலும் 30 ரன்கள் சேர்த்து இருக்க வாய்ப்பு கிடைத்து இருக்காது. ஏனெனில் டெலிவிஷன் ரீபிளேவில் அந்த பந்து ஸ்டம்பை தாக்குவது தெளிவாக தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் தங்களது காலதாமத தவறை விராட்கோலி ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘அந்த எல்.பி.டபிள்யூ. விசித்திரமான ஒன்றாகும். அது குறித்து நாங்கள் விவாதித்து அப்பீல் செய்ய செல்லுகையில் காலஅவசாகம் முடிந்து விட்டது. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று நடுவர் தெரிவித்து விட்டார். இதுபோன்ற உயர்ந்த நிலை போட்டிகளில் காலதாமத தவறை நாங்கள் செய்யக்கூடாது. முக்கியமான ஆட்டத்தில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றார்.