COVID - 19LATEST UPDATESNEWSTAMIL

மட்டக்களப்பில் இன்றைய தினம் 3 பேருக்கு கொரோனா…!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் மூன்று பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் இதனை தெரிவித்தார்.

இதற்கமைய, பெரிய போரதீவு – பட்டாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், வாழைச்சேனை பகுதியை சேர்ந்த இருவருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பண்டாரவளை மரக்கறி மொத்த வியாபார சந்தையின் வர்த்தகர் உள்ளிட்ட மூன்று பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அண்மையில், பண்டாரவளை மரக்கறி மொத்த வியாபார சந்தை தொகுதியில் உள்ள வர்த்த நிலையம் ஒன்றின் இளைஞர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து அவருடன் தொடர்புடையோர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், குறித்த இளைஞரின் தந்தைக்கும், அவரது ஏனைய குடும்ப உறுப்பினர்கள் இருவருக்குமே இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹப்புத்தளை தோட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்துவந்த 39 வயதுடைய அப்புத்தளை தோட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 25 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுறுதியானது.

இந்தநிலையில், அவரின் 62 வயதுடைய தயாருக்கே தற்போது கொவிட்19 தொற்றுறுதியானதாக ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சுதர்ஷன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

குறித்த நபரின் தாயார் உள்ளிட்ட மூன்று குடும்பத்தை சேர்ந்த 10 இற்கும் மேற்பட்டோர் கடந்த 25ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் உள்ள சோதனை சாவடியில் சேவையாற்றிய காவற்துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் அதிகளவானோருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியானதை அடுத்து, அதன் அருகில் உள்ள சோதனை சாவடியின் அதிகாரிகளுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அவர்களில் ஒரு காவற்துறை உத்தியோகத்தருக்கு இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அதேநேரம் வெள்ளவத்தை – கொலின்வூட் பகுதியில் தங்கிருந்த இந்திய பிரஜை ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து, அவரை சிகிச்சைகளுக்காக கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியான 335 பேரில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 237 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 161 பேர் கொழும்பு 1 முதல் 15 வரையான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், கம்பஹா மாவட்டத்தில் 75 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 10பேரும், குருநாகலை மற்றும் நுவரெலியாவில் தலா 4 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 3 பேரும், காலி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொவிட் 19 நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக கொவிட்19 ஐ கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஹற்றனில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பை பேணிய 60 பேருக்கு இன்றைய தினம் பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஹட்டன் பொது சுகாதார உத்தியோகஸ்;த்தர் காமதேவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் முடிவுகள் இன்றைய தினம் வெளியாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், பொது சுகாதார திணைக்களம் மற்றும் காவல்துறையினரும் இணைந்து பொது போக்குவரத்து வாகனங்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker