TAMIL
பயிற்சி கிரிக்கெட் ‘டிரா’வில் முடிந்தது: இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால், ரிஷாப் பண்ட் அரைசதம் அடித்தனர்
இந்தியா – நியூசிலாந்து லெவன் அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி கடந்த 14-ந்தேதி ஹாமில்டனில் தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 263 ரன்களும், நியூசிலாந்து லெவன் 235 ரன்களும் எடுத்தன.
28 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை அதிரடியாக தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்திருந்தது.
மயங்க் அகர்வால் 23 ரன்னுடனும், பிரித்வி ஷா 35 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர்.
பிரித்வி ஷா 39 ரன்களில் (6 பவுண்டரி, ஒரு சிக்சர்), டேரில் மிட்செலின் பந்துவீச்சில் கிளன் போல்டு ஆனார்.
அடுத்து வந்த சுப்மான் கில் (8 ரன்) முதல் இன்னிங்ஸ் போலவே ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இதன் பின்னர் மயங்க் அகர்வாலும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டும் கைகோர்த்து அருமையாக விளையாடினர்.
ஆக்ரோஷம், எச்சரிக்கை கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷாப் பண்ட் சுழற்பந்து வீச்சாளர்கள் சோதி, ஹென்றி ஹூபரின் ஓவர்களில் தலா 2 சிக்சர்களை விரட்டியடித்து அசத்தினார்.
அதே சமயம் வேகப்பந்து வீச்சில் சில பந்துகளை தொடாமல் விடவும் செய்தார்.
இதற்கிடையே, இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக அரைசதத்தை கடந்து நிம்மதி பெருமூச்சு விட்ட மயங்க் அகர்வால் 81 ரன்கள் (99 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்த நிலையில் மற்றவர்களுக்கு வழிவடும் வகையில் ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆகி வெளியேறினார்.
ரிஷாப் பண்ட் தனது பங்குக்கு 70 ரன்கள் (65 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார்.
மதிய உணவு இடைவேளை முடிந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.
அப்போது இந்திய அணி 48 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் (ரன்ரேட் 5.25) எடுத்திருந்தது. விருத்திமான் சஹா 30 ரன்னுடனும் (38 பந்து, 5 பவுண்டரி), அஸ்வின் 16 ரன்னுடனும் (43 பந்து, 2 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தனர்.
அடுத்து இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.
பயிற்சி ஆட்டத்தின் 2-வது இன்னிங்சில் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா இருவரும் ஓரளவு நன்றாக ஆடியதன் மூலம் அவர்கள் டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.