TAMIL

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி: தொடரையும் கைப்பற்றியது

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான மெல்போர்னில் நடந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கிய இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 467 ரன்கள் குவித்தது.



நியூசிலாந்து 148 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. ஆனால் ‘பாலோ-ஆன்’ வழங்காமல் 319 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய அணி, டிராவிஸ் ஹெட் (28 ரன்) ஆட்டம் இழந்ததும் தனது இன்னிங்சை முடித்துக் கொண்டது.

இதன்படி ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்களுடன் ‘டிக்ளேர்’ செய்து, 488 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதுவரை யாருமே எட்டிப்பிடிக்காத இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சென் ‘செக்’ வைத்தார்.



அவரது பந்து வீச்சில் டாம் லாதம் (8), கேப்டன் கேன் வில்லியம்சன் (0), முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் (2 ரன்) ஆகியோர் வரிசையாக காலியானார்கள்.

இதில் வில்லியம்சனுக்கு எல்.பி.டபிள்யூ. வழங்கப்பட்ட போது, அதை எதிர்த்து டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை நாடினார். ரீப்ளேயில் பந்து லெக்ஸ்டம்பை லேசாக உரசுவது தெரிந்தது.

‘நடுவரின் முடிவு’ என்ற அடிப்படையில் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

இதன் பின்னர் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், தனது பங்குக்கு நியூசிலாந்தின் மிடில் வரிசையை முற்றிலும் சீர்குலைத்தார்.

ஹென்றி நிகோல்ஸ் (33 ரன்), விக்கெட் கீப்பர் வாட்லிங் (22 ரன்), கிரான்ட்ஹோம் (9 ரன்), மிட்செல் சான்ட்னெர் (27 ரன்) அவரது சுழலில் சிக்கினர்.

ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டாம் பிளன்டெல் மட்டும் நிலைத்து நின்று போராடினார்.



சவால் நிறைந்த ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளித்து பிரமிக்கத்தக்க வகையில் ஆடிய 29 வயதான பிளன்டெல் தனது 2-வது சதத்தை நிறைவு செய்தார்.

புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

இந்த தொடரில் முதல்முறையாக தங்கள் அணியை 200 ரன்களை கடக்க வைத்த பிளன்டெல் (121 ரன், 210 பந்து, 15 பவுண்டரி) கடைசி விக்கெட்டாக கேட்ச் ஆனார்.

கையில் ஏற்பட்ட காயம் காரணமாக டிரென்ட் பவுல்ட் பேட்டிங் செய்ய வரவில்லை.

முடிவில் நியூசிலாந்து அணி 71 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் ஆஸ்திரேலியா 247 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.



ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகளும், பேட்டின்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 40 புள்ளிகள் கிடைத்தன.

வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில், ‘இந்த வெற்றி மிகவும் திருப்தி அளிக்கிறது. அதுவும் டாசில் தோற்ற நிலையில் விளையாடிய விதம் பிரமாதம்.

முதல் நாளில் எங்களது பேட்ஸ்மேன்கள் தங்களது முழு திறமையை வெளிக்காட்டினர்.



அது தான் 2-வது நாளில் நானும், டிராவிஸ் ஹெட்டும் பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வழிவகுத்தது’ என்றார்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘முதலில் பந்து வீசும் அளவுக்கு ஆடுகளத்தன்மை நன்றாகத் தான் இருந்தது. ஸ்விங்கும் ஆனது.

இதில் எங்களது உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாக இருந்தது. அதை செய்ய தவறி விட்டோம்’ என்றார்.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker