TAMIL
‘தோல்விக்கு பொறுப்பேற்க டோனி ஒருபோதும் தயங்கியது கிடையாது’ – மொகித் ஷர்மா சொல்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். போட்டியில் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவருமான 31 வயதான மொகித் ஷர்மா, இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு இருக்கும்
நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் சார்பில் நடந்த இன்ஸ்டாகிராம் உரையாடலில் கலந்து கொண்ட மொகித் ஷர்மா கூறியதாவது:-
நான் விளையாடிய வீரர்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் டோனியின் பணிவு மற்றும் நன்றியுணர்வு அவரை மற்ற வீரர்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது. மனிதநேயம் மிக்க அவர் மிகவும் எளிமையானவர்.
விளையாட்டில் கேப்டனுக்கும், தலைவருக்கும் வித்தியாசம் உண்டு.
டோனி ஒரு உண்மையான தலைவர் என்று நான் நம்புகிறேன்.
அணி எப்பொழுது வெற்றி பெற்றாலும், அதில் தனக்கு முக்கிய பங்கு இருப்பதாக அவர் ஒருபோதும் காட்டிக் கொள்ளமாட்டார்.
வெற்றி பெற்ற போட்டியில் சிறந்து விளங்கிய வீரரை தான் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அனுப்புவார்.
ஆனால் அணி தோல்வியை சந்தித்தால், தயங்காமல் எப்பொழுதும் அதற்கான பொறுப்பை முன்னின்று அவர் ஏற்றுக்கொள்வார்.
அதுவே ஒரு தலைவருக்குரிய நல்ல அறிகுறியாகும்.
அது அவரிடம் என்னை அதிகம் கவர்ந்த விஷயமாகும். டோனியின் தலைமையின் கீழ் நான் விளையாடி இருக்கிறேன்.
உலகில் உள்ள எல்லா கிரிக்கெட் வீரர்களும் டோனியின் கேப்டன்ஷியில் விளையாட விரும்புவார்கள்.
முதுகுவலி பிரச்சினையை சரிப்படுத்த ஆபரேஷன் செய்வது சரியானது என்று முடிவெடுத்து அதனை செய்த பிறகு நல்ல நிலைக்கு திரும்பி உள்ளேன்.
இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
இந்த முறை வெற்றி வாகை சூட எங்கள் அணிக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்.
வலுவான இந்திய வீரர்கள் உள்பட அருமையான வீரர்கள் எங்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
எல்லா துறைகளிலும் சரியான வீரர்கள் எங்கள் அணியில் இடம் பெற்று இருப்பதாக நான் நம்புகிறேன்.
அவர்கள் கோப்பையை வெல்லும் சவாலுக்கு எங்களுக்கு உதவுவார்கள். எனவே எங்கள் ரசிகர்கள் அணியிடம் இருந்து பெரிய விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட உற்சாகமாக இருக்கிறேன். இது இளம் வீரர்களை அதிகம் கொண்ட அணியாகும்.
அணியில் இடம் பெற்றுள்ள ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்களை எனக்கு நன்றாக தெரியும்.
பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் (ஆஸ்திரேலியா) இணைந்து பணியாற்றுவதற்கும், அவரிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கும் இது பொன்னான வாய்ப்பாகும்.
எல்லா வீரர்களும் அவரை பாராட்டி வருகிறார்கள். ஐ.பி.எல். போட்டி எப்பொழுது நடந்தாலும், இந்த அணி மிகவும் சிறப்பாக செயல்படும் என்று நான் நம்புகிறேன். டெல்லி அணியின் ரசிகர்களுக்கு நாங்கள் சிறந்த மகிழ்ச்சியை கொடுப்போம்.
பவுலர்கள் பந்தை பளபளக்க செய்ய சிறிய பொருளை வைத்து தேய்த்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளிக்க
திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.
இந்த விஷயத்தில் ஒவ்வொரு பவுலருக்கும் தனிப்பட்ட விருப்பம் இருக்கும். பந்தை பளபளக்க செய்ய நான் எச்சிலை அதிகம் பயன்படுத்தமாட்டேன்.
மேலும் இந்த நாட்களில் எச்சிலை அதிகம் பயன்படுத்த நடுவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். பந்தை பளபளக்க செய்ய வியர்வையை பயன்படுத்துவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்.