TAMIL

தொடரை வெல்லப்போவது யார்? – கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று பலப்பரீட்சை

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த ஆண்டில் இந்திய அணி விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும்.



தொடக்க ஆட்டத்தில் தடுமாறிய இந்திய அணி விசாகப்பட்டினத்தில் எழுச்சி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (159 ரன்), லோகேஷ் ராகுல் (102 ரன்) சதம் அடித்தனர்.

ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யரும் நொறுக்க இந்திய அணி 387 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தியது இன்னொரு சிறப்பு அம்சமாக அமைந்தது.

ஆனால் இந்தியாவுக்கு தொடர்ந்து பீல்டிங் தான் கவலைக்குரிய வகையில் இருக்கிறது.

இரண்டு ஆட்டங்களிலும் முக்கியமான தருணங்களில் இந்திய பீல்டர்கள் கேட்ச்களை கோட்டை விட்டனர்.

தவறுகளை திருத்திக் கொண்டு பீல்டிங்கில் நாம் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.

பீல்டிங்கில் உற்சாகமாக செயல்பட வேண்டும் என்று இந்திய கேப்டன் கோலி அறிவுறுத்தியுள்ளார்.



முதுகுவலி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

அவருக்கு பதிலாக 27 வயதான நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். அவர் அறிமுக வீரராக களம் காண வாய்ப்புள்ளது.

கேப்டன் விராட் கோலி முதல் 2 ஆட்டங்களில் (4, 0) சொதப்பினார்.

மேலும் இந்த மைதானத்தில் அவர் இதுவரை (3 ஒரு நாள் ஆட்டங்களில் முறையே 3, 22, 8 ரன்) ஜொலித்ததில்லை.

இந்த சோகத்துக்கு முடிவு கட்டி இந்த ஆட்டத்தில் அவர் ரன்மழை பொழிவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

மொத்தத்தில் பலம் வாய்ந்த இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால், ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ச்சியாக கைப்பற்றிய 10-வது தொடராக பதிவாகும்.

இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசை தான் நீண்ட கால பிரச்சினையாக இருந்தது.



அதற்கு தீர்வு காணும் வகையில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடி வருகிறார்.

9 இன்னிங்சில் ஆடி 6 அரைசதங்கள் அடித்துள்ள 25 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆரம்பத்தில் நான் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடிய போது, ரசிகர்களை கவரும் வகையில் அதிரடி காட்டுவதில் மட்டும் தான் கவனம் செலுத்தினேன்.

நிதானமாக பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒரு போதும் விளையாடியதில்லை.

எனது இயல்பான பாணியில் விளையாடி வந்தேன்.

ஆனால் உயர்மட்ட அளவிலான போட்டிகளில் நமது பக்குவமான ஆட்டத்தை இன்னொரு கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன்.

என்னால் அதிரடியாகவும் ஆட முடியும்.

பந்தை தட்டிவிட்டு ஒன்று, இரண்டு ரன் வீதமும் எடுக்க முடியும்.



எனது ஆட்டத்திறமை என்ன என்பதை இப்போது சரியாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாடுகிறேன்.

சூழ்நிலைக்கும், அணியின் தேவைக்கும் தகுந்தபடி விளையாடுவது முக்கியம்.

அப்படி தான் சென்னை ஒரு நாள் போட்டியில் ஆடினேன்’ என்றார்.

திடீரென விசுவரூபம் எடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரில் இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது.

முதலாவது ஆட்டத்தில் சதம் விளாசிய ஹெட்மயர் (139 ரன்) மற்றும் ஷாய் ஹோப் (102, 78 ரன்), நிகோலஸ் பூரன் (29, 75 ரன்) ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர்.

கேப்டன் பொல்லார்ட்டும் அதிரடி காட்டுவதில் சளைத்தவர் அல்ல. பந்து வீச்சில் ஷெல்டன் காட்ரெல் அச்சுறுத்துகிறார்.

ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.8½ கோடிக்கு விலை போன (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) உற்சாகத்துடன் காட்ரெல் களம் இறங்குவார்.



அந்த அணி இந்தியாவுக்கு எதிராக ஒரு நாள் தொடரை வென்று 13 ஆண்டுகள் ஆகி விட்டது.

அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் படையினர் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘நாளைய ஆட்டத்தில் (இன்று) தங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம் என்பதை எங்களது வீரர்கள் அனைவரும் அறிவர்.

ஆனால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கூட வெற்றி பெறாமலும் போகலாம்.

தற்போது நாங்கள் எங்களது அணியை கட்டமைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம்.

அதை நோக்கி பயணிப்பதால் இந்த ஆட்டத்தின் முடிவை அதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.



இந்த மைதானத்தில் 300, 320 ரன்கள் எடுத்தால் சவாலான ஸ்கோர் என்று சொல்கிறார்கள்.

இந்த காலக்கட்டத்தில் வெற்றி பெறுவதற்கு இத்தகைய ஸ்கோரை நோக்கி தான் ஆட வேண்டும்.

குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்யும் போது எப்போதும் 320 ரன்களைத் தான் எதிர்நோக்குகிறோம்’ என்றார்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் அல்லது யுஸ்வேந்திர சாஹல்.

வெஸ்ட் இண்டீஸ்: இவின் லீவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், ரோஸ்டன் சேஸ், நிகோலஸ் பூரன், பொல்லார்ட் (கேப்டன்), ஜாசன் ஹோல்டர், கீமோ பால், அல்ஜாரி ஜோசப், கேரி பியர் அல்லது ஹேடன் வால்ஷ், காட்ரெல்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மைதானம் எப்படி?

கட்டாக்கில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் இதுவரை 18 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன.



இதில் 16 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியா 12-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.

இங்கு கடைசியாக 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஆட்டத்தில் இந்தியா 381 ரன்கள் குவித்ததும், இங்கிலாந்து அணி 366 ரன்கள் வரை எடுத்து நெருங்கி வந்து தோற்றதும் கவனிக்கத்தக்கது.

இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடுகள மேற்பார்வையாளர் கூறுகையில், ‘இது இன்னொரு அதிக ரன்கள் குவிக்கப்படும் ஆட்டமாக இருக்கும். 350 ரன்களுக்கு மேல் எடுப்பார்கள் என்பதே எங்களது கணிப்பாகும்.

ஆடுகளத்தில் உள்ள புற்களை போதுமான அளவுக்கு குறைத்து சமப்படுத்தி விட்டோம்.

அவுட் பீல்டு வேகமாக இருக்கும் வகையில் தயார்படுத்தி உள்ளோம்’ என்றார். இரவில் பனிப்பொழிவின் தாக்கமும் இருக்கும்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker