TAMIL
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியா வந்தது
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நேற்று அதிகாலை விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தது.
பின்னர் தென்ஆப்பிரிக்க அணியினர் முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறும் தர்மசாலாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் வருகிற 12-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி லக்னோவில் 15-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் 18-ந் தேதியும் நடக்கிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தென்ஆப்பிரிக்க அணியினருடன் டாக்டர் சுயப் மஞ்ச்ரா வந்துள்ளார்.
தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் அளித்த ஒரு பேட்டியில், ‘எங்கள் அணியின் மருத்துவர் சொல்லும் அறிவுரையின் படி நாங்கள் செயல்படுவோம்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்திய வீரர்களுடன் முறைப்படி கைகுலுக்குவது குறித்து சூழ்நிலைக்கு தகுந்தபடி முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.
தென்ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு ரசிகர்களுடன் கைகுலுக்கவும், கலந்துரையாடவும், செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.