TAMIL
தெண்டுல்கரை விட லாராவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினம் – மெக்ராத் பேட்டி
உலகின் தலைச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர், ஆஸ்திரேலியாவின் கிளைன் மெக்ராத். 50 வயதான மெக்ராத் 124 டெஸ்டுகளில் விளையாடி 563 விக்கெட்டுகளும், 250 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 381 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். தனது காலத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக மிரட்டிய அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த அதிவேக கேள்வி-பதில் வருமாறு:-
கேள்வி: உங்களது வாழ்க்கையில் விடுபட்ட, செய்ய விரும்பிய ஏதாவது ஒரு பந்து வீச்சு?
பதில்: மணிக்கு 100 மைல் வேகத்தில் பந்துவீச வேண்டும் என்று ஆசைப்பட்டது உண்டு.
கேள்வி: சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), பிரையன் லாரா ( வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய இரு ஜாம்பவான்களில் யாருக்கு பந்து வீசுவது கடினமாக இருந்தது?
பதில்: சவாலான கேள்வி. இருப்பினும் எனது அனுபவத்தில் லாராவுக்கு பந்து வீசுவது கொஞ்சம் கடினம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.
கேள்வி: இது உலக கோப்பை இறுதி ஆட்டம். நீங்கள் தான் கடைசி விக்கெட்டை எடுக்க வேண்டிய நெருக்கடி. எதிரணியின் வெற்றிக்கு 2 ரன் தேவை. இந்த மாதிரியான சூழலில் மன்கட் முறையில் ரன்அவுட் செய்வீர்களா?
பதில்: ஒரு போதும் செய்யமாட்டேன்.
கேள்வி: சர்வதேச கிரிக்கெட்டில் தற்போதைய பவுலர்களில் முழுமையான ஒரு வேகப்பந்து வீச்சாளர் யார்?
பதில்: ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ். அவர் பந்து வீசும் விதம் எனக்கு பிடிக்கும்.
கேள்வி: உங்களது கனவு ஹாட்ரிக் விக்கெட்டில் (தொடர்ச்சியாக 3 வீரர்களை வீழ்த்துவது) எந்த பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
பதில்: பிரையன் லாரா, சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட்.
கேள்வி: 1990-களில் 20 ஓவர் கிரிக்கெட் போன்று அதிரடியாக ஆடிய வீரர் யார்?
பதில்: மார்க்வாக் (ஆஸ்திரேலியா).
கேள்வி: உங்களது வாழ்க்கையில் ஏதாவது ஒரு போட்டியின் முடிவை மாற்ற வேண்டும் என்று இருந்தால் உங்களது தேர்வு எந்த ஆட்டமாக இருக்கும்?
பதில்: 1994-ம் ஆண்டு சிட்னியில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டை (கடைசி விக்கெட்டாக மெக்ராத் ஆட்டம் இழந்த இந்த டெஸ்டில் 5 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது) சொல்வேன். அந்த போட்டியின் முடிவை மாற்றினால் மகிழ்ச்சி அடைவேன்.
கேள்வி: ஒரு விளையாட்டு வீரராக கிரிக்கெட்டை தவிர்த்து வேறு விளையாட்டுகளில் யாரை சந்தித்து பேச ஆசைப்படுகிறீர்கள்?
பதில்: உசேன் போல்ட் (தடகளம்), ரோஜர் பெடரர் (டென்னிஸ்), ஸ்டீவ் ரெட்கிராவ் (துடுப்பு படகு வீரர்).
கேள்வி: உங்களது கிரிக்கெட் பயணம் சினிமாவாக எடுக்கப்பட்டால், உங்களது கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்?
பதில்: பிராட் பிட் (ஹாலிவுட் நடிகர்), ஹக் ஜாக்மன் (ஆஸ்திரேலிய நடிகர்), ஜிம் கேரி (கனடா நகைச்சுவை நடிகர்) ஆகியோரில் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு மெக்ராத் கூறியுள்ளார்.