TAMIL
தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்:மத்திய பிரதேச அணி முன்னிலை
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 132 ரன்கள் முன்னிலை பெற்று
இருக்கிறது.
ரஞ்சி கிரிக்கெட்
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – மத்தியபிரதேசம் அணிகள் இடையிலான லீக் (‘பி’ பிரிவு) ஆட்டம் இந்தூர் ஹோல்கர்
ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த தமிழகம் முதல் இன்னிங்சில் 149 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய பிரதேச அணி 3 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மத்திய பிரதேச அணி ரமீஸ்கான் (87 ரன்), வெங்கடேஷ் அய்யர் (88 ரன்),
மிஹிர் ஹிர்வானி (54 ரன், நாட்-அவுட்) ஆகியோரது அரைசதங்களின் உதவியுடன் சரிவில் இருந்து நிமிர்ந்தது.
ஆட்ட நேர முடிவில் மத்தியபிரதேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்து 132 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
மும்பை தடுமாற்றம்
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் முன்னாள் சாம்பியன் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் (‘பி’ பிரிவு) ரெயில்வே அணி முதல்
இன்னிங்சில் 266 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.
கேப்டன் கரண் ஷர்மா சதம் (112 ரன், 15 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
152 ரன்கள் பின்தங்கிய மும்பை அணி 2-வது இன்னிங்சிலும் தடுமாற்றத்திற்கு உள்ளானது.
2-வது நாள் முடிவில் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தாவில் நடக்கும் மிசோரம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் (பிளேட் பிரிவு) புதுச்சேரி அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு
458 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
பராஸ் டோக்ரா இரட்டை சதமும் (200 ரன்), சுரேஷ்குமார் சதமும் (103 ரன்) அடித்தனர்.
அருண் கார்த்திக் 86 ரன்களில் கேட்ச் ஆனார்.
385 ரன்கள் பின்தங்கிய மிசோரம் அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 30 ரன்களுடன் ஊசலாடிக் கொண்டிருந்தது.
வெற்றியை நோக்கி டெல்லி…
டெல்லி-ஐதராபாத் இடையிலான ஆட்டம் (‘ஏ’ பிரிவு) டெல்லியில் நடந்து வருகிறது.
இதில் தொடக்க நாளில் 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்திருந்த டெல்லி அணி 2-வது நாளான நேற்று எஞ்சிய 4 விக்கெட்டுகளையும்
இழந்து 284 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
கேப்டன் ஷிகர் தவான் 140 ரன்களில் விக்கெட் கீப்பர் சுமந்திடம் கேட்ச் ஆனார்.
அடுத்து களம் இறங்கிய ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் டெல்லி வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 29
ஓவர்களில் 69 ரன்களில் முடங்கியது.
இஷாந்த் ஷர்மா, சிமர்ஜீத் சிங் தலா 4 விக்கெட்டுகளும், பவான் சுயல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து ‘பாலோ-ஆன்’ ஆன ஐதராபாத் அணி 215 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது.
10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 20 ரன்களுடன் தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது.