CRICKETLATEST UPDATESNEWSTAMIL
தமிழக வீரர் நடராஜனுக்கு அஜய் ஜடேஜா பாராட்டு – கடந்த 44 நாட்களில் வாழ்க்கை மாறிவிட்டது
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தமிழக வேகப்பந்து வீரர் டி.நடராஜன் 20 ஓவர், ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்டில் அறிமுகமானார்.
இதன்மூலம் 3 வடிவிலும் ஒரே சுற்றுப்பயணத்தில் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நடராஜன் படைத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது நடராஜன் சர்வதேச ஆட்டத்தில் முதல் முறையாக அறிமுகமானார். அதில் 2 விக்கெட் கைப்பற்றினார். அதன்பிறகு மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் சேர்த்து 6 விக்கெட் வீழ்த்தினார்.
தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் இடம்பெற்றார். இதன்மூலம் டெஸ்டிலும் அவர் அறிமுகமானார். தனது முதல் டெஸ்டிலேயே 3 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார்.
பும்ரா காயம் அடைந்ததால், நடராஜனுக்கு டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதை அவர் சரியாக பயன்படுத்தி கொண்டார்.
இந்த நிலையில் தமிழக வீரர் நடராஜனை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நடராஜன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். கடந்த 44 நாட்களில் அவரது வாழ்க்கை திசையே மாறிவிட்டது. ஆஸ்திரேலிய பயணத்தில் 20 ஓவர் போட்டிக்கான அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. வருண் சக்கரவர்த்தி காயம் அடைந்ததால் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
கடைசி ஒருநாள் போட்டியில் ரன்களை விட்டுக்கொடுத்தாலும், 2 விக்கெட் கைப்பற்றினார். அதன்பிறகு 20 ஓவர் போட்டியில் நடராஜன் தனது பந்துவீச்சில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினார்.
தற்போது டெஸ்ட் போட்டியிலும் அவர் அபாரமாக பந்துவீசி வருகிறார்.
இவ்வாறு அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.