TAMIL
டோனியால் தவறிப்போன சதம்! ரகசியம் வெளியிட்ட கவுதம் கம்பீர்
டோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2011-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் சேவாக், டெண்டுல்கர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கவுதம் கம்பீர் அசத்தலாக ஆடி 97 ரன்கள் அடித்து, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.
பேட்டி ஒன்றில் கவுதம் கம்பீர் இவ்விவகாரம் பற்றி கூறியதாவது:- “இந்த கேள்வி பலமுறை என்னிடம் கேட்கப்பட்டுள்ளது. நான் 97 ரன்கள் எடுக்கும் வரை எனது தனிப்பட்ட ரன் குறித்து சிந்திக்கவில்லை. இலங்கை நிர்ணயித்த இலக்கை நோக்கி கொண்டுதான் சென்றேன். எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. நானும் டோனியும் களத்தில் இருந்த போது, ஓவர்களுக்கு இடையே, என்னிடம் வந்த டோனி, இன்னும் 3 ரன்கள் தான் உள்ளது. அதை எடுத்தால் நீ சதம் அடிப்பாய் என்று என்னிடம் கூறினார்.
அதுவரை இலக்கை நோக்கி சென்ற எனக்கு, 3 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சிந்தனை எழுந்தது. டோனி என்னிடம் சொல்வதற்கு முன்புவரை, இலங்கையை வெல்ல வேண்டும் என்ற இலக்கு மட்டுமே என் கண் முன் இருந்தது. ஆனால் டோனி கூறியபின் எல்லாமே மாறிவிட்டது.
97 ரன்கள் இருந்தபோது, இன்னும் 3 ரன்கள் தான் சதம் அடிக்க தேவை என்ற அழுத்தம், விருப்பம் எனக்குள் வேகத்தை ஏற்படுத்தியது. பதற்றத்தில் ஆட்டமிழந்தேன். அதனால்தான் எப்போதும் நாம் நிகழ்விலேயே இருக்க வேண்டும்.
ஒருவேளை என்னிடம் டோனி சொல்லாமல் இருந்திருந்து, இலங்கை அணிக்கு எதிரான இலக்கு மட்டுமே என்னுடைய மனதில் இருந்திருந்தால், என்னால் எளிதாகச் சதம் அடித்திருக்க முடியும்” என்றார்.