CRICKETLATEST UPDATESNEWSTAMIL

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆட வேண்டும் – வாஷிங்டன் சுந்தர் விருப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் இன்னிங்சில் மோசமான நிலையில் தவித்த இந்திய அணியை அரைசதம் (62 ரன்) அடித்து நிமிர வைத்தார். 2-வது இன்னிங்சிலும் கடைசி கட்டத்தில் 22 ரன்கள் விளாசி வெற்றிக்கு துணைநின்றார். அத்துடன் இந்த டெஸ்டில் மொத்தம் 4 விக்கெட் கைப்பற்றியும் அசத்தினார். சென்னை திரும்பியுள்ள 21 வயதான வாஷிங்டன் சுந்தர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவனாக நினைத்துக் கொள்வேன். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தனது காலத்தில் செய்தது போன்று நானும் சவாலை ஏற்றுக்கொள்வேன். ரவிசாஸ்திரி தான் விளையாடிய கால அனுபவத்தை எங்களிடம் சொல்லி இருக்கிறார். அவரது கதை உத்வேகம் அளிக்கக்கூடிய ஒன்றாகும். நியூசிலாந்துக்கு எதிரான அறிமுக டெஸ்டில் ஒரு சுழற்பந்து வீச்சாளராக இறங்கி 4 விக்கெட் வீழ்த்தியதோடு 10-வது வரிசையில் பேட்டிங் செய்தார். அங்கிருந்து எப்படி தொடக்க வீரர் அந்தஸ்தை எட்டினார், உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை எப்படி எதிர்கொண்டு விளையாடினார் போன்ற அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அவரை போன்று நானும் தொடக்க ஆட்டக்காரராக ஆட விரும்புகிறேன்.

ஒரு இளம் வீரராக உந்துசக்தி அளிக்கவும், ஊக்கப்படுத்துவதற்கும் வீரர்களின் ஓய்வறையிலேயே நிறைய முன்மாதிரிகளை பார்க்கிறேன். விராட் கோலி, ரஹானே, ரோகித் சர்மா, அஸ்வின் போன்றவர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். இந்த வீரர்களை நீங்கள் கேட்டாலே போதும். எப்போதும் ஆலோசனை வழங்கவும், வழிநடத்தவும் தயாராக இருப்பார்கள்.

பிரிஸ்பேன் டெஸ்டில் ஆடுகளம் முதல் நாளில் சுழற்பந்து வீச்சுக்கு பெரிய அளவில் சாதகமாக இல்லை. ஆனாலும் ஸ்டீவன் சுமித்தின் விக்கெட்டை வீழ்த்தியது கனவு போல் இருந்தது.

இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் கூறினார்.
Related Tags :

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker