TAMIL
டுவிட்டரில் இணைந்த ரிக்கி பாண்டிங்; மகனுடன் வலை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிட்டார்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (வயது 44). ஒரு நாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய 3 போட்டி முறைகளிலும் கேப்டனாக இருந்தவர்.
கடந்த 1995ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி 27 ஆயிரத்து 486 ரன்களை சேர்த்துள்ள இவர், சர்வதேச போட்டிகளில் அதிக சதங்களை அடித்து வேறு எந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
உலக கோப்பை போட்டிகளில் கடந்த 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியை தலைமையேற்று நடத்தி சென்று இரு முறை வெற்றி பெற வைத்தவர்.
கடந்த 2012ம் ஆண்டு அவர் டெஸ்ட் போட்டியில் இறுதியாக விளையாடினார்.
ஐ.பி.எல். போட்டிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கான பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். முகநூலில் முன்பே இணைந்து விட்ட அவர் சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டரில் இன்று இணைந்துள்ளார்.
டுவிட்டரில் முதன்முறையாக இணைந்துள்ள ரிக்கி பாண்டிங் தனது மகனுடன் கிரிக்கெட் போட்டிக்கான வலை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
அதில் அவரது மகன் பிளெட்சர் அருகே முழங்கால் போட்டபடி கையில் பேட் ஒன்றை எடுத்து மகனிடம் கொடுப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது.
அவருக்கு 11 ஆயிரத்து 800 பேர் பின்பற்றுபவர்களாக உள்ளனர். அவருக்கு கேபிட்டல்ஸ் அணி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளது.