TAMIL
டக் ஆவுட் ஆனாலும் சர்வதேச போட்டிகளில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் அதிக சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறார் விராட் கோலி.
அதே பட்டியலில், இந்திய அளவில் எட்டாவது வீரராக இடம் பெற்று ஜாம்பவான்கள் வரிசையில் தன் பெயரைப் பொறித்துள்ளார் கோலி. கோலி இந்தப் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
பொல்லார்டு பந்துவீச்சில் முதல் பந்தில் டக் அவுட் ஆனார் கோலி.
விராட் கோலியின் 241வது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகும்.
இதுவரை 84 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 75 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி ஒட்டுமொத்தமாக 400 சர்வதேச போட்டிகளில் ஆடி உள்ளார்.
உலக அளவில் 400 சர்வதேச போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டும் 33-வது வீரர் ஆவார் கோலி.
அதே சமயம், இந்திய அளவில் இந்த மைல்கல்லை எட்டும் எட்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
அதிக சர்வதேச போட்டிகளை ஆடிய இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் 664 போட்டிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
அவருக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் டோனி 538 போட்டிகளுடன் இருக்கிறார்.
ராகுல் டிராவிட் – 509 போட்டிகள், அசாருதீன் – 433 போட்டிகள், சவுரவ் கங்குலி – 424 போட்டிகள், அனில் கும்ப்ளே – 403 போட்டிகள், யுவராஜ் சிங் – 402 போட்டிகள் ஆடி உள்ளனர்.
எட்டாவது வீரராக 400 சர்வதேச போட்டிகளை ஆடிய விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.