TAMIL
ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி
ஜிம்பாப்வே–வங்காளதேசம் அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்த ஜிம்பாப்வே அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.
தமிம் இக்பால் 41 ரன்னிலும், லிட்டான் தாஸ் 59 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
சவுமியா சர்கார் 62 ரன்னுடனும், கேப்டன் மக்முதுல்லா 14 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணி 19 ஓவர்களில் 152 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது.
இதனால் வங்காளதேச அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்காளதேச அணி தரப்பில் முஸ்தாபிஜூர் ரகுமான், அமினுல் இஸ்லாம் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நாளை நடக்கிறது.