COVID - 19IPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறுதல் வெற்றி பெறுமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று துபாயில் நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி ஏற்கனவே பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. 12 ஆட்டங்களில் 4 வெற்றி மட்டுமே பெற்று 8 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் ஆறுதல் வெற்றியை பெற சென்னை சூப்பர் கிங்ஸ் முயலும்.
சென்னை அணியில் அம்பதி ராயுடு, டுபெலிசிஸ், சாம் கர்ரன், ஜடேஜா போன்ற வீரர்கள் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் (பெங்களூருக்கு எதிராக) இளம் வீரர் ருது ராஜ், கெய்க்வாட் அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். இன்றைய போட்டியிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். பந்து வீச்சில் தீபக் சாகர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாகிர் ஆகியோர் உள்ளனர்.
ஏற்கனவே கொல்கத்தாவிடம் சென்னை அணி தோற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொல்கத்தாவின் அடுத்த சுற்று வாய்ப்பை குறைக்க சென்னை அணி தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் 6 வெற்றிகள் பெற்று 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன்ரேட் (-0.479) மோசமாக இருக்கிறது. இதனால் அந்த அணிக்கு எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெறவேண்டியது அவசியம ஆகும். ஒரு ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கிவிடும்.
கொல்கத்தா அணியில் சுப்மான்கில், நிதிஷ்ரானா, இயன் மார்கன், சுனில்நரேன், பெர்குசன், வருண் சக்ரவர்த்தி, கும்மின்ஸ் ஆகியோர் உள்ளனர். கொல்கத்தா அணி இன்று வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகிறது.