TAMIL
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளைச் சேர்ந்த இந்திய வீரர்கள் அங்கு சென்று விட்டனர். வெளிநாட்டு வீரர்களும் அமீரகம் வந்த வண்ணம் உள்ளனர்.
‘அமீரகம் சென்றதும் ஓட்டலில் கட்டாயம் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அப்போது 1, 3, 6-வது நாட்களில் என்று மொத்தம் 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
எப்போதும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
மூன்று சோதனையிலும் தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகே ஒன்றாக பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.’
என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் ஆகும்.
அது மட்டுமின்றி விமான நிலையத்திலும் தனியாக பரிசோதனை செய்யப்படுகிறது.
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த 21-ந்தேதி துபாய் சென்றனர்.
6 நாட்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை முடிந்து சென்னை அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக அந்த அணியில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
கடைசிகட்ட பரிசோதனையில் இந்திய அணிக்காக சமீபத்தில் விளையாடிய வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கும், அணியின் உதவியாளர்கள், வலை பயிற்சி பவுலர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கை 12 வரை இருக்கும் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், சென்னை அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.