ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்றிரவு நடந்த 25வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி தொடக்கத்தில் சற்று திணறியது. ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தபோதிலும், கேப்டன் விராட் கோலி மட்டும் நிலைத்து நின்று விளையாடினார்.
15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 95 ரன்களுடன் அந்த அணி இருந்தது.
இதனால், அதுவரை சென்னை வசம் இருந்த போட்டியை அடுத்த 5 ஓவர்களில் அடித்து ஆடி கோலி ஸ்கோரை உயர்த்தினார்.
போட்டி முடிவில் 20 ஓவர்களில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் குவித்தது.
கோலி 90 ரன்கள் (52 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) சேர்த்தது அணிக்கு வலு சேர்த்தது.
தொடர்ந்து 170 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. ஆனால், 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட்டுக்கு 132 ரன்களே எடுத்திருந்தது.
இதனால், பெங்களூரு அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வெற்றி பெற்றது.
இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல முன்னாள் பேட்ஸ்மேனான வீரேந்தர் சேவாக் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்.
இறுதி வரை கடுமையாக போராடும் அணியாக இருந்த சென்னை அணி, நேற்றைய போட்டியில் வேதனையடைய செய்துள்ளது.
குறிப்பிடும்படியாக பேட்டிங் செய்த விதம் வருத்தம் அளிக்கிறது. விராட் கோலி சிறந்த முறையில் அடித்து ஆடினார்.
இதில் இருந்து, எப்படி அடித்து விளையாடலாம் என பல பேட்ஸ்மேன்கள் கற்று கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்.