TAMIL
சூப்பர் ஓவரை எப்படி தொடங்குவது என்ற யோசனையே எனக்கு இல்லை; ரோகித் சர்மா
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்தது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல். ராகுல் களமிறங்கினர்.
முதல் 2 போட்டிகளில் சோபிக்காத ரோகித் சர்மா இன்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி ரோகித் அரைசதம் கடந்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு179 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களே எடுத்தனர்.
இதனால் சமனில் முடிந்தது. நியூசிலாந்தில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 95 ரன்கள் அடித்து இருந்தார்.
இதை தொடர்ந்து சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது.
இந்தியா தரப்பில் பும்ரா வீசிய ஓவரில் நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் சவுதி வீசிய ஓவரில் இந்தியா 20 ரன்கள் எடுத்து, 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 20 ஓவர் தொடரையும் இந்தியா கைப்பற்றி உள்ளது.
ரோகித் சர்மா கடைசி இரு பந்துகளில் சிக்சர் அடித்து தேவையான ரன்களை சேர்த்தது இந்தியா வெற்றி பெற உதவியது.
அவர் முதல் பந்தில் 2 ரன்களும், 2வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்த பின், ராகுல் 3வது பந்தில் பவுண்டரி அடித்து நம்பிக்கை ஊட்டினார்.
எனினும் 4வது பந்தில் ஒரே ஒரு ரன் கிடைத்தது. இதனால் வெற்றி பெறுவதில் கேள்வி எழுந்தது.
தொடர்ந்து 5 மற்றும் 6வது பந்தில் அதிரடியாக விளையாடி ரோகித் அடித்த சிக்சர்களால் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்த வெற்றிக்கு பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரோகித் சர்மா, சூப்பர் ஓவர் என்பது எப்பொழுதும் வேடிக்கையாக இருக்கும்.
அதில் நான் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன்.
ஆனால் விளையாடியது இல்லை.
இன்று விளையாடியதே எனது முதல் சூப்பர் ஓவர் போட்டியாகும். ஒரு ரன் எடுப்பதா? அல்லது அடித்து ஆடுவதா? எப்படி தொடங்குவது என்பது பற்றிய யோசனையே எனக்கு இல்லை.
அதனால் முதல் பந்தில் இருந்து அடித்து ஆடுவது என நானும், கே.எல். ராகுலும் முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார்.