FOOTBALLLATEST UPDATESNEWSTAMIL
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து : யுவென்டஸ் அணியிடம் பார்சிலோனா படுதோல்வி
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை பார்சிலோனாவில் நடந்த ‘ஜி’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் யுவென்டஸ் (இத்தாலி)-பார்சிலோனா (ஸ்பெயின்) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே யுவென்டஸ் அணி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. அதன் பலனாக 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி யுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோல் அடித்தார். 20-வது நிமிடத்தில் அந்த அணியின் இன்னொரு வீரர் வெஸ்டன் மெக்கென்னி ‘சிசர் கிக்’ மூலம் பந்தை கோலுக்குள் திணித்தார். இதனால் முதல் பாதியில் யுவென்டஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பதில் கோல் திருப்ப பார்சிலோனா அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. அந்த அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான லயோனல் மெஸ்சி உள்ளிட்ட அந்த அணி வீரர்கள் 7 முறை கோலை நோக்கி அடித்த ஷாட்களை யுவென்டஸ் அணியின் கோல் கீப்பர் பப்போன் அபாரமாக தடுத்து நிறுத்தினார். இதற்கிடையில் 52-வது நிமிடத்தில் கிட்டிய மற்றொரு பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் கோல் அடித்தார்.
முடிவில் யுவென்டஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை பந்தாடியது. அத்துடன் கடந்த அக்டோபர் மாதத்தில் சொந்த மண்ணில் நடந்த பார்சிலோனாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கண்ட (0-2) தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. பார்சிலோனாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக யுவென்டஸ் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவில்லை. 2018-ம் ஆண்டில் யுவென்டஸ் அணிக்கு மாறிய பிறகு ரொனால்டோ, மெஸ்சியை களத்தில் எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
லீக் ஆட்டங்கள் முடிவில் யுவென்டஸ், பார்சிலோனா அணிகள் தலா 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 15 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. இருப்பினும் இரு அணிகளுக்கு இடையிலான நேருக்கு நேர் மோதலில் அதிக கோல் அடித்ததன் அடிப்படையில் யுவென்டஸ் அணி முதலிடத்தை பிடித்தது. பார்சிலோனா அணி 2-வது இடத்தை தனதாக்கியது. இரு அணிகளும் தங்கள் பிரிவில் இருந்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறின.
இதற்கிடையே இந்த போட்டி தொடரில் பாரீஸ்சில் நேற்று முன்தினம் நடந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.)-இஸ்தான்புல் பசாக்செஹிர் அணிகள் இடையிலான ஆட்டம் 16-வது நிமிடத்தில் எழுந்த பிரச்சினையை அடுத்து கைவிடப்பட்டது. நடுவர் ஒருவர், இஸ்தான்புல் அணி வீரரை கருப்பு இனத்தை குறிக்கும் வகையில் பேசியதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து இரு அணியினரும் எதிர்ப்பு தெரிவித்து மைதானத்தை விட்டு வெளிநடப்பு செய்ததால் இந்த ஆட்டம் பாதியில் முடிவுக்கு வந்தது.