TAMIL
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்த பும்ரா, தவான்

இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடுகின்றன.
இலங்கைக்கு எதிராக 3 சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இதற்கான முதல் போட்டி வருகிற ஜனவரி 5ந்தேதி தொடங்குகிறது.
இதனை அடுத்து வருகிற ஜனவரி 14ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது.
இந்த போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு பற்றி தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நடந்த 5 பேர் கொண்ட குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்பின் வெளியான அறிவிப்பில், இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
முழங்காலில் ஏற்பட்ட காயங்களுக்காக 25 இடங்களில் தவானுக்கு தையல் போட வேண்டிய நிலை உள்ளது.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் பயிற்சி நேரத்தில் பும்ரா பந்து வீசினார்.
அதேவேளையில், டி20 போட்டிகளில் முன்னணி வீரரான ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று வேகப்பந்து வீச்சாளரான முகமது சமிக்கும் டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.