TAMIL

சமநிலை அடைந்த 20ஆவது வீரர்களின் போர்

”வீரர்களின் போர்” என அழைக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகஜனாக் கல்லூரி அணிகள் இடையிலான 2020 ஆம் ஆண்டுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

இரண்டு நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் போட்டியானது மகஜனாக் கல்லூரியின் சொந்த மைதானத்தில் நேற்று (28) 20 ஆவது முறையாக ஆரம்பமாகியிருந்தது.

தொடர்ந்து நேற்று போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது, போட்டியில் முதலில் துடுப்பாடிய மகாஜனக் கல்லூரி அணியினர் 313 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை இடைநிறுத்தினர்.



இன்று போட்டியின் இரண்டாம் நாளில் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியினர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிக்கு துடுப்பாட்டத்தில் சிறந்த ஆரம்பம் கிடைக்காது போனாலும், மத்திய வரிசையில் துடுப்பாடிய தனுஷ்ராஜ் 46 ஓட்டங்களுடன் அணியை வலுப்படுத்தினார். இதேநேரம், ஏனைய மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான தன்சன் அரைச்சதம் தாண்டி 77 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த வீரர்களைத் தொடர்ந்து, பின்வரிசையில் துடுப்பாடிய பிரின்தன், கெளரிசங்கர் ஆகியோர் மிகவும் பொறுமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதோடு சதங்களையும் பெற்றனர்.

இந்த இரண்டு வீரர்களினதும் அட்டகாச துடுப்பாட்டத்தோடு போட்டியின் இரண்டாம் நாள் முழுவதும் முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியினர், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 100.5 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 500 ஓட்டங்களைப் பெற்றனர்.

பின்னர், ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியினர் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மாத்திரம் துடுப்பாடிய காரணத்தினால் ஆட்டமும் சமநிலையில் முடிவடைந்தது.

ஸ்கந்தவரோதயா அணியின் துடுப்பாட்டம் சார்பாக சதம் விளாசிய வீரர்களில் கெளரிசங்கர் 129 ஓட்டங்களைப் பெற, பிரின்தன் 117 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

அதேநேரம், மகஜனாக் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் சதுர்ஜன் 5 விக்கெட்டுக்களை சாய்த்து சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருக்க, சிலுக்ஷன் மற்றும் வாமலக்ஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் பதம் பார்த்திருந்தனர்.

இந்த ஆண்டுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்திருப்பதால், வீரர்களின் போருக்கான வெற்றிக் கிண்ணத்தை தொடர்ந்தும் மகஜனாக் கல்லூரி அணி தக்கவைக்கத்துக் கொள்கின்றது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker