COVID - 19LATEST UPDATESNEWSTAMIL
கொரோனா தொற்றுக்குள்ளான காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் உள்ள காவல்நிலையங்களுடன் தொடர்புடைய 15 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு 96 காவல்துறை உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், 708 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹோமாகம காவல்துறை அதிகாரப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தெற்கு அதிகவேக நெடுஞ்சாலை ஊடாக பேருந்துகளில் பயணங்களை மேற்கொள்ளவிருந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்கவிடம் எமது செய்தி பிரிவு வினவியது.
இதற்கு பதிலளித்த அவர், மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் பேருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்