TAMIL
கொரோனா தொற்று: அபாயகரமான ஆடுகளத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடுவது போன்றது – கங்குலி
*இந்திய பெண்கள் ஆக்கி அணியின் வீராங்கனைகள், உடல் பயிற்சி சவாலை இணையதளத்தில் வெளியிட்டு அதன் மூலம் கொரோனா பாதிப்புக்கு கடந்த 17 நாட்களாக நிதி திரட்டினர்.
ரூ.20 லட்சம் திரட்ட வேண்டும் என்ற இலக்கை நேற்று எட்டினர்.
*இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘கொரோனா தொற்றால் உருவாகியுள்ள தற்போதைய சூழ்நிலை அபாயகரமான ஆடுகளத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடுவது போன்று உள்ளது.
பந்து நன்கு ஸ்விங்கும் ஆகும், சுழன்றும் எகிறும்.
பேட்ஸ்மேன் சிறு தவறிழைத்தாலும் அவ்வளவு தான். பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ரன் குவிக்க வேண்டும். ஆனால் சிறிய தவறுக்கு கூட இடம் கொடுக்காமல் விக்கெட்டையும் பாதுகாக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் இந்த டெஸ்டில் வெற்றி பெற முடியும். இது மிகவும் கடினமானது.
ஆனால் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த போட்டியில் (கொரோனாவுக்கு எதிரான போர்) வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.
*ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா), சங்கக்கரா (இலங்கை), பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்), காலிஸ் (தென்ஆப்பிரிக்கா), சச்சின் தெண்டுல்கர் (இந்தியா) ஆகிய 5 பேரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்பதை வரிசைப்படுத்தும்படி பாகிஸ்தான் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது யூசுப்பிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் சச்சின் தெண்டுல்கரை நம்பர் ஒன் ஆக தேர்வு செய்தார். லாரா, பாண்டிங், காலிஸ், சங்கக்கராவுக்கு அடுத்தடுத்த இடங்களை வழங்கினார்.
கிரிக்கெட்டில் தெண்டுல்கர், லாரா தனக்கு பிடித்தமான வீரர்கள் என்று மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.
*குத்துச்சண்டை பயிற்சி தொடங்கும் போது, பயிற்சிக்குரிய பார்ட்னர்களை (உதவியாளர்கள்) வைத்துக் கொள்ள இப்போதைக்கு பரிந்துரைக்கமாட்டேன்.
ஏனெனில் அவரது கையில் குத்தி பயிற்சி எடுக்கும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இயலாது என்று 6 முறை உலக சாம்பியனான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் கூறியுள்ளார்.