TAMIL

‘கிரிக்கெட்டுக்கு வெளியே உள்ள வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் டிராவிட்’-புஜாரா சொல்கிறார்

‘கிரிக்கெட்டுக்கு வெளியே உள்ள வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எனக்கு உணர வைத்தவர் டிராவிட்’ என்று இந்திய டெஸ்ட் அணி வீரர் புஜாரா தெரிவித்தார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 3-வது வரிசை பேட்ஸ்மேனான புஜாரா இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

கிரிக்கெட் விளையாடாத நேரத்தில் ஆட்டம் குறித்த சிந்தனையில் இருந்து வெளியே வருவது எவ்வளவு முக்கியம் என்பதை முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தான் எனக்கு உணர வைத்தார்.

கிரிக்கெட்டையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் ஒருசேர கலக்கக்கூடாது என்பதை அவர் கற்றுக்கொடுத்தார். ஏறக்குறைய எனக்கும் அதே எண்ணம் தான் இருந்தது.

ஆனாலும் இது குறித்து நான் டிராவிட்டுடன் கலந்துரையாடிய பிறகு தான் நல்ல தெளிவு கிடைத்தது.

அத்துடன் நான் என்ன செய்ய வெண்டும் என்பதும் புரிந்தது. அந்த ஆலோசனை மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.

வீரர்கள் தங்களுடைய தொழில்முறை கிரிக்கெட்டையும், சொந்த வாழ்க்கையையும் தனித்தனியாக எப்படி கையாளுகிறார்கள் என்பதை கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடுகையில் நான் பார்த்து இருக்கிறேன்.

கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தினாலும், அதில் இருந்து எப்பொழுது வெளியில் வர வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் கிரிக்கெட்டுக்கு வெளியேயும் ஒரு வாழ்க்கை இருக்கிறது.

ராகுல் டிராவிட் எனக்கு எப்படிப்பட்டவர் என்பதை ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியாது. அவர் எனக்கு எப்பொழுதும் ஊக்கம் அளிப்பவராக உள்ளார். எப்போதும் அவர் எனக்கு அப்படி தான் இருப்பார். டிராவிட் மீது எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. இருந்தாலும் நான் அவரது ஆட்டத்தை காப்பி அடிக்க ஒருபோதும் முயற்சித்தது கிடையாது. எங்களுடைய ஆட்ட பாணியில் ஒற்றுமை இருக்கும். ஆனால் அது அவர் எனக்கு பிடித்தமானவர் என்பதால் உருவான ஒற்றுமை கிடையாது.

குறிப்பாக சவுராஷ்டிரா அணியுடனான அனுபவத்தின் மூலம் இந்த ஆட்ட முறை எனக்கு வந்தது. உங்கள் அணியை முன்னெடுத்து செல்ல சதம் அடித்தால் மட்டும் போதாது, நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதை சவுராஷ்டிரா அணிக்காக விளையாடும் போது கற்றுக்கொண்டேன். அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவுவது எப்படி?, விக்கெட்டை இழக்காமல் இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை பலவீனமான சவுராஷ்டிரா ஜூனியர் அணிக்காக விளையாடுகையில் புரிந்து கொண்டேன்.

இவ்வாறு புஜாரா கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker