TAMIL
‘கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன்’- இந்திய வீரர் விஹாரி பேட்டி
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் 26 வயதான ஹனுமா விஹாரி இதுவரை 9 டெஸ்டில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 552 ரன்கள் சேர்த்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த சீசனில் இங்கிலாந்தில் நான் 4 கவுண்டி ஆட்டங்களில் விளையாட உத்தேசித்து இருந்தேன்.
எந்த அணிக்காக களம் இறங்கி இருப்பேன் என்பதை ஒப்பந்த நடைமுறைகள் முடிந்த பிறகே தெரிவிக்க இயலும். கொரோனா பிரச்சினையால் அதுவும் தடைபட்டு விட்டது.
செப்டம்பர் மாதம் வரை கவுண்டி போட்டி நடைபெறும் என்பதால், நிலைமை கட்டுக்குள் வந்ததும் என்னால் அந்த போட்டிகளில் விளையாட முடியும்.
அதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ளும் அனுபவம் கிடைக்கும்.
கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 70 பந்துகளில் 55 ரன்கள் எடுத்ததை எனது மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று சொல்லமாட்டேன். நான் நன்றாக ஆடினேன்.
ஆனால் எனது பங்களிப்பு அணியின் வெற்றிக்கு உதவாமல் போய் விட்டது. மிகவும் கடினமான ஆடுகளத்தில் எடுக்கப்பட்ட அது நல்ல ஸ்கோர் தான்.
இருப்பினும் அணி வெற்றி பெறும் போதே அதற்கு மதிப்பு அதிகம்.
நான் தன்னம்பிக்கை மிக்க ஒரு வீரர்.
அணி நிர்வாகமும் வெளிநாட்டு சூழலில் வெற்றிகரமாக செயல்படக்கூடிய பேட்டிங் தொழில்நுட்பம் என்னிடம் இருப்பதாக நம்புகிறது.
அதற்கு ஏற்ப நானும் வெளிநாட்டு மண்ணில் கணிசமாக ரன்கள் குவித்து இருக்கிறேன்.
வெளிநாட்டில் ஆடும் போது, அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப நம்மை சீக்கிரமாகவே மாற்றிக்கொள்வது முக்கியம்.
என்னால் உலகின் எங்கு விளையாடினாலும் அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும், அணி நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதை திறம்பட செய்ய முடியும் என்று நம்புகிறேன்.