TAMIL
‘கருப்பு இனத்தவருக்கு ஆதரவான சின்னத்துடன் வெஸ்ட்இண்டீஸ் அணி விளையாடும்’ – கேப்டன் ஜாசன் ஹோல்டர் தகவல்
3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து தற்போது வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.
2-வது, 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் முறையே ஜூலை 16 மற்றும் 24-ந் தேதிகளில் தொடங்கி நடைபெறுகிறது.
இதற்கிடையில் கடந்த மாதம் அமெரிக்காவில் வெள்ளை இனத்தை சேர்ந்த போலீசாரின் பிடியில் கருப்பு இனத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்த சம்பவம் அங்கு மட்டுமின்றி உலகமெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அத்துடன் கருப்பு இன மக்களின் வாழ்க்கைக்கு ஆதரவாக ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்‘ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு பிரசார இயக்கம் தொடங்கப்பட்டது.
இனவெறிக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு விளையாட்டு பிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தனர்.
‘கருப்பு இனத்தவருக்கு எதிரான பிரச்சினையில் தங்களது நிலைப்பாடு என்ன? என்பதை அணியின் அனைத்து வீரர்களுடனும் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.
எங்கள் முடிவு ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்’ என்று வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கருப்பு இனத்தவருக்கு ஆதரவான போராட்டத்தில் பயன்படுத்தப்படும் சின்னத்தை (பிளாக் லைவ்ஸ் மேட்டர்) இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் தங்களது அணியினரின் பனியன் காலரில் அணிந்து விளையாட வெஸ்ட்இண்டீஸ் அணி முடிவு செய்துள்ளது.
பிரிமீயர் கால்பந்து லீக் போட்டியில் வீரர்கள் பயன்படுத்தியது போன்ற இந்த சின்னத்தை அணிந்து விளையாட வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் விடுத்த வேண்டுகோளை ஏற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் விடுத்துள்ள அறிக்கையில், ‘கருப்பு இனத்தவருக்கு ஆதரவாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஒற்றுமையாக இருந்து உதவி செய்வது நமது கடமையாகும்.
விளையாட்டு வரலாற்றில் கிரிக்கெட்டுக்கும், வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கும் இது முக்கியமான தருணமாகும். டெஸ்ட் தொடரை வென்று விஸ்டன் கோப்பையை தக்க வைக்கவே நாங்கள் இங்கிலாந்துக்கு வந்து இருக்கிறோம்.
அதேநேரத்தில் உலகில் என்ன நடக்கிறது என்பது பற்றியும், சமநீதி, சமத்துவத்துக்கான போராட்டம் குறித்தும் நன்கு உணர்ந்து இருக்கிறோம்.
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட்டின் வளமான வரலாற்றை இளம் வீரர்களாக நாங்கள் அறிந்து இருக்கிறோம். இந்த விளையாட்டின் அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாவலர் என்பதையும் உணர்ந்து உள்ளோம்.
நிறத்தை வைத்து மக்களை தீர்மானிக்கும் எண்ணம் எல்லை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.
நிறத்தின் அடிப்படையிலும், அதன் பின்னணி அடிப்படையிலும் வேறுபாடு காட்டப்படாமல் எல்லோருக்கும் சமஉரிமை கிடைப்பதற்கான வழிமுறையை நாம் கண்டறிய வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.