TAMIL
கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளை சாம்பியன்களாக அறிவித்து இருக்க வேண்டும் – கம்பீர் கருத்து
கடந்த ஆண்டு (2019) ஜூலை மாதம் இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 241 ரன்கள் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. ஆட்டம் சமனில் (டை) முடிந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் சேர்த்தன.
சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் அதிக பவுண்டரிகள் அடித்ததை கணக்கிட்டு இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அந்த அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.
நியூசிலாந்து அணி முந்தைய (2015) உலக கோப்பையை போல் 2-வது இடத்துடன் மீண்டும் ஏமாற்றம் அடைந்தது.
இந்த சூப்பர் ஓவர் விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இனிமேல் வரும் பெரிய போட்டிகளில் சூப்பர் ஓவர் முடிவில் ஆட்டம் ‘சமன்’ ஆனால் முடிவு தெரியும் வரை சூப்பர் ஓவரை தொடர வேண்டும் என்று சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம் செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
முந்தைய உலக கோப்பை போட்டியில் அரங்கேறிய இந்த சர்ச்சை குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பீர் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ‘2019-ம்
ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளையும் சாம்பியன்கள் என்று கூட்டாக அறிவித்து இருக்க வேண்டும்.
இங்கிலாந்து அணிக்கு கிடைத்த உலக சாம்பியன் பட்டம் நியூசிலாந்து அணிக்கும் கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் அந்த அணிக்கு துரதிர்ஷ்டவசமாக அந்த பட்டம் கிடைக்கவில்லை.
கடந்த உலக கோப்பை மட்டுமின்றி அதற்கு முன்பாகவும் நியூசிலாந்து அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
கடந்த 2 உலக கோப்பை போட்டியில் அந்த அணி 2-வது இடம் பிடித்தது.
எல்லா சூழ்நிலைகளிலும் நியூசிலாந்து அணி கடும் சவால் அளிக்கும் வகையில் விளையாடுகிறது.
நாம் அவர்களுக்கு போதுமான அங்கீகாரத்தை அளிக்கவில்லை’ என்று தெரிவித்தார்.