TAMIL
கங்குலி அணிந்த உடையின் ரகசியம்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முழு நேர தலைவராக கிரிக்கெட் வீரர் ஒருவர் பொறுப்பேற்பது கடந்த 65 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இந்த பெருமையோடு நிருபர்களை சந்திக்க வந்த சவுரவ் கங்குலி, கருநீல நிற மேலாடை (பிளேஸர்) அணிந்திருந்தார்.
அப்போது அவரிடம், ‘இந்த உடை தளர்வாக இருக்கிறதே, அப்படி என்ன இந்த உடையில் விசேஷம்’ என்று கேட்டனர். அதற்கு கங்குலி ‘நான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற போது இந்த ‘பிளேஸர்’ உடை எனக்கு கிடைத்தது. அதையே இன்று கிரிக்கெட் வாரிய தலைவராக பதவி ஏற்கும் நாளில் அணிந்து கொள்வது என்று முடிவு செய்தேன். ஆனால் இந்த அளவுக்கு தளர்வாக இருக்கும் என்று உணரவில்லை’ என்றார்.