TAMIL
ஓய்வுக்கு பின்னரும் கூட நியூசிலாந்து அணிக்காக களமிறங்கிய பயிற்சியாளர்!
நியூசிலாந்து அணியில் உடல் நலக்குறைவால் வீரர்கள் அவதிப்பட்டு வருவதால், அந்த அணியின் பீல்டிங் பயிற்சியாளர் களமிறங்கி விளையாடியுள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்கிற கணக்கில் முன்னிலை பெற்றது.
போட்டிக்கு முன்னதாக ஸ்காட் குகலீஜ்ன் காய்ச்சலாலும், மிட்செல் சாண்ட்னர் வயிற்று வலியாலும் பாதிக்கப்பட்டதால் உடை மாற்றும் அறையில் ஓய்வில் இருந்து வருகின்றனர்.
இதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நியூசிலாந்து வீரரும், பீல்டிங் பயிற்சியாளருமான லூக் ரோஞ்சி 37 வது ஓவரில், சொந்த அணிக்காக மீண்டும் களமிறங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
அவர் இறுதியாக 2017ம் ஆண்டு விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.