TAMIL

ஓய்வு முடிவை மாற்றினார், பிராவோ – சர்வதேச 20 ஓவர் போட்டியில் விளையாட தயார் என்று அறிவிப்பு

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான வெய்ன் பிராவோ கடைசியாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடினார்.

அதன் பிறகு அவர் காயம் மற்றும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அணியில் இடம் பெறவில்லை.



36 வயதான வெய்ன் பிராவோ கடந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தற்போது அவர் தனது ஓய்வு முடிவை மாற்றியுள்ளார். 20 ஓவர் சர்வதேச போட்டியில் விளையாட தயார் என்று அறிவித்து இருக்கிறார்.

இது குறித்து வெய்ன் பிராவோ விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்புகிறேன் என்பதை எனது ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

எனது இந்த பெரிய அறிவிப்பில் எந்தவித ரகசியமும் கிடையாது.

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தினால் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.

பயிற்சியாளர் சிமோன்ஸ், கேப்டன் பொல்லார்ட் தலைமையில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக 20 ஓவர் சர்வதேச போட்டியில் மீண்டும் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.



மேலும் வெய்ன் பிராவோ அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

வெஸ்ட்இண்டீஸ் அணியில் திறமையான இளம் வீரர்கள் பலர் உள்ளனர். பொல்லார்ட், சிமோன்ஸ், ஜாசன் ஹோல்டர் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் அங்கம் வகிக்கிறார்கள்.

சமீபகாலங்களில் அணியில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதுடன் வெற்றியை ருசிக்கவும் தொடங்கி இருக்கிறது.

அணியின் நல்ல மாற்றத்துக்கு என்னாலும் பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன்.

அண்மையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் வெஸ்ட்இண்டீஸ் அணி ஒரு வெற்றியை பெற்றது. எஞ்சிய 2 ஆட்டங்களிலும் நல்ல ஸ்கோரை எடுத்தது.



எங்கள் அணி பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அனுபவத்தின் மூலம் பந்து வீச்சாளர்களுக்கு என்னால் உதவ முடியும். கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டில் என்னால் நிறைய போட்டிகளில் விளையாட முடியவில்லை.

அடுத்த ஆண்டை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அடுத்த ஆண்டு சிறப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். உடல் ரீதியாக நான் நல்ல நிலையில் இருக்கிறேன்.

உடல் தகுதியில் எனக்கு ஒருபோதும் பிரச்சினையில்லை.

எனது திறமையும், அனுபவமும் ஒருபோதும் என்னை விட்டு போகாது. மீண்டும் கிரிக்கெட் விளையாட இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker