TAMIL

ஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம்

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதாலும், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதாலும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல்-மே மாதங்களில் ஐ.பி.எல். தொடரை நடத்த வாய்ப்பில்லை.

தற்போதைய அசாதாரண சூழல் சீரானதும் செப்டம்பர்-அக்டோபர் அல்லது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட்டை நடத்தும் யோசனையில் இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளது.

ஆனால் அந்த சமயத்தில் சில சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் வருவதால் இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டி நடப்பது சந்தேகம் தான்.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியை தங்கள் நாட்டில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது.

இலங்கையில் கொரோனாவின் தாக்கம் மிகவும் குறைவாக உள்ளது.

அங்கு இதுவரை 238 பேர் மட்டுமே இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே விரைவில் நிலைமை சரியாவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா கூறுகையில், ‘ஐ.பி.எல். போட்டியை ரத்து செய்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், அணிகளின் உரிமையாளர்களுக்கும் ஏறக்குறைய ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும்.

இன்னொரு நாட்டில் இந்த போட்டியை நடத்துவதன் மூலம் இந்த நஷ்டத்தை ஓரளவு குறைக்க முடியும்.

அவர்கள் இலங்கை மண்ணில் விளையாடினால் டி.வி. மூலம் இந்திய ரசிகர்கள் போட்டியை எளிதில் கண்டுகளிக்க முடியும்.

நேரப் பிரச்சினையும் இருக்காது. எங்களது கோரிக்கை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்கும் என்று நம்புகிறோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

இலங்கையில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உள்ளிட்ட எல்லாவிதமான வசதிகளையும் செய்து கொடுப்போம். எங்களுக்கும் ஓரளவு வருமானம் கிடைக்கும்’ என்றார்.

இலங்கையின் விருப்பம் குறித்து பெயர் சொல்ல விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று கூறுகையில், ‘ஒட்டுமொத்த உலகமும் கொரோனா பாதிப்பால் முடங்கி இருக்கும் நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் சொல்வதற்கு எதுவும் இல்லை.

இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து முறைப்படி எந்த பரிந்துரையும் இன்னும் வரவில்லை. எனவே அது குறித்து விவாதிக்கப்படவில்லை’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker