TAMIL

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் – அணியின் உரிமையாளர் நம்பிக்கை

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி மும்பையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்க இருந்தது.

கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாமல் போனால் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் இந்த ஆண்டின் இறுதிக்குள் போட்டியை நடத்தி விட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.

20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதால் அந்த காலகட்டத்தில் (அக்டோபர், நவம்பர்) ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டி குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா அளித்த ஒரு பேட்டியில், ‘தற்போதைய சூழ்நிலையை பார்க்கையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவதில் நிறைய சிக்கல்கள் இருப்பது தெரிகிறது.

அதுபோல் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதும் எளிதான காரியமல்ல. போட்டி நடைபெறும் இடத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஐ.பி.எல். போட்டியை முழுமையாக நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் எல்லா முயற்சிகளும் செய்யும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஆனால் போட்டியின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை.

ஏனெனில் சூழ்நிலையை நாங்கள் அறிவோம். ஐ.பி.எல். போட்டிக்கான இடம் மற்றும் அட்டவணையை எளிதில் முடிவு செய்து விட முடியும்.

போட்டி நடைபெறும் இடத்தில் தேவையான அளவுக்கு ஓட்டல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஐ.பி.எல். போட்டி நடந்தால் ஸ்பான்சர் வழங்க பல நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன. எனவே ஸ்பான்சரை கவர்வதில் எந்தவித சிக்கலும் இருக்காது.

தற்போதைய கடினமான சூழ்நிலையில் இருந்து வெளியில் வர உலகுக்கு ஒரு வடிகால் தேவைப்படுகிறது.

எனவே இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டி நடந்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது எனது கருத்தாகும்‘ என்று தெரிவித்தார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker