IPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
ஐ.பி.எல் கிரிக்கெட் : டெல்லி – பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதில் துபாயில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இறுதி சுற்றை எட்டாத ஒரே அணியான டெல்லி அணி இந்த முறை மிகுந்த நம்பிக்கையுடன் தயாராகியுள்ளது. ஷிகர் தவான், பிரித்வி ஷா, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஹெட்மயர், ரிஷாப் பண்ட் என்று டெல்லி அணி மிரட்டலான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. அஸ்வின், ரஹானேயின் வருகை கூடுதல் பலம் சேர்க்கும்.
ஆனால் ரஹானேவுக்கு இடம் கிடைப்பது சந்தேகமே என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘அணி மிகவும் சரியான கலவையில் அமைந்துள்ளது. பேட்டிங்கில் மிடில் வரிசைக்கு தான் நிறைய போட்டி நிலவுகிறது. ரஹானே மூலம் எங்களது பேட்டிங் மேலும் வலுவடைந்துள்ளது. ரிஷாப் பண்ட் கடந்த ஆண்டை போல் இந்த சீசனிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கிறேன். துபாய் ஆடுகளம் அனேகமாக வேகம் குறைந்து தான் இருக்கும். ஆனால் கொஞ்சம் அதிகமாக பவுன்ஸ் ஆகும் என்று நினைக்கிறேன். ஆட்டங்கள் பல நடக்கும் போது ஆடுகளத்தன்மை மாறும். அப்போது சுழற்பந்து வீச்சுக்கு இன்னும் அதிகமாக ஒத்துழைக்கலாம்’ என்றார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கும்பிளேயின் பயிற்சியில், புதிய கேப்டன் லோகேஷ் ராகுல் தலைமையில் களம் காணுகிறது. சமீபத்தில் இங்கிலாந்து தொடரின் கடைசி ஒரு நாள் போட்டியில் கிளைன் மேக்ஸ்வெல் 7 சிக்சருடன் அதிரடியாக சதம் அடித்தார். அவர் பார்முக்கு திரும்பியிருப்பது பஞ்சாப் அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும். சரியான அணி கலவைக்காக முதல் ஆட்டத்தில் ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்ல் வெளியே உட்கார வைக்கப்படலாம். கரிபியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஓவருக்கு சராசரி 5.29 ரன் வீதமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டிய பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் ஐ.பி.எல்.-லிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மயங்க் அகர்வால், நிகோலஸ் பூரன், சர்ப்ராஸ் கான், முகமது ஷமி, காட்ரெல் என்று தரமான வீரர்கள் அணியில் உள்ளனர்.
பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘இளமையும், அனுபவமும் கலந்த அருமையான அணியாக உள்ளோம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த சீசனை மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் முனைப்புடன் எதிர்நோக்கி இருக்கிறோம்’ என்றார்.
மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இவ்விரு அணிகளும் 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி அதில் 14-ல் பஞ்சாப்பும், 10-ல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.