TAMIL
ஊக்கமருந்து சம்பவம்: கிரிக்கெட்டில் விலகிய காலம் சித்திரவதையாக இருந்தது – பிரித்வி ஷா
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் மும்பையைச் சேர்ந்த 20 வயதான பிரித்வி ஷா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஊக்கமருந்து சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது. கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருந்த இக்காலகட்டத்தில் சித்தரவதை செய்யப்பட்டது போல உணர்ந்தேன்.
மனதில் நிறைய சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்தன.
ஆனால் என் மீதான நம்பிக்கையை தளரவிடவில்லை. பேட்டிங் பயிற்சியில் ஈடுபட அனுமதி கிடைக்காததால், லண்டனில் சிறிது நாட்கள் உடற்தகுதி பயிற்சி மேற்கொண்டேன்.
தடை முடிந்த பின், உள்ளூர் போட்டிக்கு திரும்பிய போது, முன்பை விட அதிக ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்தினேன்.
மீண்டும் ‘பேட்டிங்’ செய்த போது, எனது ‘பார்மை’ இழக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டேன்.
ஊரடங்கால் வீட்டில் இருப்பதால் உடற்தகுதியில் கவனம் செலுத்தி வருகிறேன். எனது தந்தைக்கு சமையல் உதவுகிறேன்.
முட்டைகளை நன்றாக சமைக்கும் நான், சில புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். தவிர ‘பப்ஜி’ விளையாடுகிறேன்.
இவ்வாறு பிரித்வி ஷா கூறினார்.
கடந்த 10-ம் தேதி அளித்த பேட்டியில், ஊக்கமருந்து சோதனையில் சிக்கியது (8 மாத தடை விதிக்கப்பட்டது), கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டது மோசமான தருணமாகும்.
ஒரு விளையாட்டு வீரராக எந்த மருந்தை சாப்பிட்டாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சிறிய மருந்து என்றாலும் உங்களது டாக்டர் அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய டாக்டர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகே உட்கொள்ள வேண்டும்.
எந்த மருந்து என்றாலும் அது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பட்டியலில் இருக்கிறதா என்பதை முன்னெச்சரிக்கையாக டாக்டர்களிடம் கேட்பதே நல்லது.
எனது விவகாரத்தை பாருங்கள். இருமல் குணமாவதற்கு மருந்து சாப்பிட்டேன். அந்த மருந்து தடை செய்யப்பட்ட மருந்து பட்டியலில் இருந்தது தெரியாததால் பிரச்சினையில் சிக்கினேன்.
அந்த தவறில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
இப்போது, சாதாரண மருந்து என்றாலும் கூட கிரிக்கெட் வாரிய டாக்டர்களிடம் ஆலோசித்த பிறகு சாப்பிடுகிறேன். கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்த அந்த காலக்கட்டம் மிகவும் கடினமானது.
மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். இது போன்று வேறு எந்த வீரருக்கும் நடக்கக்கூடாது எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.