CRICKETLATEST UPDATESNEWSTAMIL
இந்தியா-இங்கிலாந்து தொடர்: சேப்பாக்கத்துக்கு டெஸ்ட் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து போட்டிகளுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி இங்கிலாந்து அணி இலங்கையில் போட்டியை முடித்துவிட்டு, ஜனவரி 27-ந் தேதி சென்னை வருகிறது. இங்கிலாந்து அணி இந்தியாவில் 60 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டி இருப்பதால், பெரும்பாலான போட்டிகள் ஒரே இடங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி சென்னை, அகமதாபாத், புனே ஆகிய நகரங்களில் மட்டுமே போட்டி நடைபெறுகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம மைதானத்தில் நடக்கிறது. பிப்ரவரி 5 முதல் 9-ந் தேதி வரையிலும், பிப்ரவரி 13 முதல் 17-ந் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
3-வது (பகல்-இரவு) மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் (பிப்ரவரி 24-28, மார்ச் 4-8) நடக்கிறது.
20 ஓவர் போட்டிகள் அகமதாபாத்திலும் (மார்ச் 12, 14, 16, 18, 20), ஒருநாள் போட்டிகள் புனேயிலும் (மார்ச் 23, 26, 28) நடக்கிறது.
இதற்கிடையே முதல் 2 டெஸ்ட் போட்டியை நடத்த சேப்பாக்கம் மைதானத்துக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முதல் 2 டெஸ்ட் போட்டியை மொகாலியில் நடத்ததான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருந்தது. சேப்பாக்கம் ஆடுகளம் இந்திய பந்துவீச்சுக்கு உகந்தது என்பதால் சென்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து சென்னைக்கு வருவதுதான் மிகவும் எளிதானது. கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம். இதன் காரணமாகவும் சென்னை சேப்பாக்கம் மைதானம் முதல் 2 டெஸ்டுக்கு தேர்வு செய்யப்பட்டது.
சென்னையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த டெஸ்டில் இந்திய அணி இங்னிங்ஸ் மற்றும் 75 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது.
இந்த டெஸ்டில்தான் கருன்நாயர் டிரிபிள் சதம் அடித்திருந்தார். ராகுல் ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார்.
இந்தியா-இங்கிலாந்து தொடருக்கு ரசிகர்களை அனுமதிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஸ்டேடியத்துக்குள் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து அடுத்த மாதம் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்கிறது.
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.