TAMIL
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்துள்ள ஓய்வு வரவேற்கத்தக்கது – பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்கிறார்
வேகமாக பரவி வரும் கொடூர நோயான கொரோனா தொற்றால் இந்தியாவில் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்து உள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், ஐ.பி.எல். என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் போட்டிகளின்றி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்கள்.
இந்த ஓய்வு அவசியமானது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது:-
கடினமான நியூசிலாந்து தொடரின் (ஐந்து 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட்) இறுதியில் இந்திய வீரர்கள் மனதளவில் சோர்வடைந்தனர்.
மேலும் உடல்தகுதி பிரச்சினை, சிறு சிறு காயங்கள் ஏற்பட்டன. இந்த சூழலில் அவர்களுக்கு கிடைத்துள்ள இந்த ஓய்வு நல்ல விஷயம் தான்.
கடந்த 10 மாதங்களில் இந்திய அணி தொடர்ச்சியாக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதன் பாதிப்பு சமீபத்தில் தெரிந்தது.
நானும், உதவி பயிற்சியாளர்களும் கடந்த ஆண்டு மே 23-ந்தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இங்கிலாந்துக்கு புறப்பட்டோம்.
அதன் பிறகு நாங்கள் வீட்டில் 10, 11 நாட்கள் மட்டுமே இருந்திருக்கிறோம். மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் வீரர்களின் நிலைமையை சொல்லவே வேண்டாம்.
அவர்கள் எந்த அளவுக்கு உடல்வலியை அனுபவித்து இருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
அது மட்டுமின்றி 20 ஓவர் போட்டியில் ஆடி விட்டு, உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வது எளிதானது அல்ல.
இங்கிலாந்தில் உலக கோப்பை நிறைவடைந்ததும் அங்கிருந்து வெஸ்ட் இண்டீசுக்கு கிளம்பினோம்.
பிறகு தாயகம் திரும்பி தென்ஆப்பிரிக்க அணியுடன் மோதினோம்.
இரண்டரை மாதங்கள் உள்ளூர் சீசனை முடித்துக் கொண்டு நியூசிலாந்துக்கு சென்று விளையாடினோம்.
தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பது கடினமானது.
எனவே வீரர்களுக்கு கிடைத்துள்ள இந்த ஓய்வு வரவேற்கக்கூடியது தான்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் பாதியிலேயே ரத்தானது எங்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
ஆனால் இது போன்று நடக்ககூடும் என்று நாங்கள் முன்கூட்டியே எதிர்பார்த்தது தான்.
அந்த சமயத்தில் தான் கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது.
அதனால் உடனடியாக ஊரடங்கு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதும் தெரியும்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியபோதே நிலைமையை புரிந்து கொண்டோம்.
சிங்கப்பூர் வழியாக நாங்கள் இந்தியா வந்தடைந்த அன்று தான் முதல்முறையாக விமான நிலையங்களில் பயணிகளை மருத்துவ பரிசோதனை செய்ய தொடங்கினர்.
அது மட்டுமின்றி நாங்கள் சரியான நேரத்தில் நியூசிலாந்தில் இருந்து நம் நாட்டுக்கு திரும்பி விட்டதாக உணர்ந்தோம்.
அந்த சமயத்தில் நியூசிலாந்தில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி தென்பட்டது.
இப்போது அந்த எண்ணிக்கை அங்கு 300-ஐ தாண்டிவிட்டது.
கிரிக்கெட் வீரர்கள் என்ற முறையில் எங்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது.
விராட்கோலி உள்ளிட்டோர் சமூக வலைதளம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.
கிரிக்கெட்டை விட பொதுமக்களின் பாதுகாப்பு தான் மிகவும் முக்கியம். இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.