TAMIL

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை பிரித்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை- மஞ்ச்ரேக்கர் கருத்து

டோனிக்கு பிறகு மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) இந்திய கிரிக்கெட் அணிக்கும் விராட்கோலி கேப்டனாக இருந்து வருகிறார்.

மூன்று வடிவிலான போட்டிக்கும் விராட்கோலி கேப்டனாக இருப்பதால் அவருக்கு அதிக பணிச்சுமை உள்ளது.

எனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டு அணிகளை போல ஒவ்வொரு வடிவிலான போட்டிக்கும் தனித்தனி கேப்டன்களை நியமிக்கலாம்.

20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவுக்கு வழங்கலாம் என்று முன்னாள் வீரர் அதுல் வாசன் உள்பட சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் யூடியூப் சேனலில் கூறும் போது, ‘தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை பிரித்து கொடுப்பது குறித்து சிந்திக்க வேண்டிய அவசியமில்லை என்பதே எனது கருத்தாகும்.

நாம் மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக செயல்படக்கூடியவரை கேப்டனாக பெற்று இருப்பது அதிர்ஷ்டமாகும். இந்த தருணத்தில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விராட்கோலி சிறந்த கேப்டனாக திகழ்கிறார்.

எனவே இந்திய அணியின் கேப்டன் பதவியை பிரிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. வருங்காலத்தில் அதற்கான நேரம் வரக்கூடும்.

இந்திய டெஸ்ட் அணிக்கு நல்ல கேப்டனும், வீரருமாக இருக்கும் ஒருவரால் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் சிறப்பாக விளையாட முடியாத சூழ்நிலை வந்தால் மாற்று கேப்டன் குறித்து யோசிக்கலாம்.

முன்பு டோனி மூன்று வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக இருக்கையில் சிறப்பாக செயல்பட்டது போல் தற்போது விராட்கோலி கேப்டனாக 3 வடிவிலான போட்டிகளிலும் அருமையாக செயல்பட்டு வருகிறார்’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘குறுகிய வடிவிலான போட்டிகளில் லோகேஷ் ராகுல் அசத்தினாலும், டெஸ்ட் போட்டியை பொறுத்தமட்டில் 5-வது இடத்தில் களம் இறங்க பொருத்தமானவர் ரஹானே தான்.

அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுலை அந்த இடத்துக்கு கொண்டு வருவது என்பது சரியானதாக இருக்காது.

உள்ளூர் போட்டியில் அதிக ரன்கள் குவித்த பிறகு டெஸ்ட் போட்டி மிடில் வரிசையில் லோகேஷ் ராகுலை சேர்க்கலாம்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker