TAMIL
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் ஓய்வு அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடியவர் வாசிம் ஜாபர் (வயது 42). வலது கை ஆட்டக்காரரான இவர், இந்திய அணியில் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,944 ரன்கள் குவித்துள்ளார்.
இவற்றில் 11 அரை சதங்கள் மற்றும் 5 சதங்களும் அடங்கும். சராசரி 34.11 வைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விளையாடி இரட்டை சதம் (212) அடித்த ஒரு சில இந்திய பேட்ஸ்மேன்களில் ஜாபரும் ஒருவர்.
இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் பிரபலம் ஆன ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.
150 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஜாபர், அனைத்து நிலைகளிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன் என அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்பொழுது, இந்திய அணிக்காக தனது மகன்களில் ஒருவர் விளையாட வேண்டும் என்று எனது தகப்பனார் விரும்பினார்.
அந்த கனவை நிறைவேற்றியதற்காக நான் பெருமை கொள்கிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் போட்டியை போன்று, இது முதல் இன்னிங்சின் முடிவே. பயிற்சியாளர், கமெண்ட்ரி போன்ற 2வது இன்னிங்சில் விளையாட ஆவலாக உள்ளேன் என அறிவிப்பொன்றில் அவர் தெரிவித்து உள்ளார்.