TAMIL
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா தந்தை ஆகிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் முதுகுப் பகுதியில் காயம் அடைந்து அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
சிகிச்சைக்கு பிறகு இந்திய அணிக்காக எந்தவொரு போட்டியிலும் விளையாடாத அவர் உள்ளூர் போட்டியில் விளையாடி தனது உடல் தகுதியை நிரூபித்தார்.
இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடித்தார்.
ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த போட்டி தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில் ஹர்திக் பாண்ட்யா துபாய்க்கு சுற்றுலா சென்று இருந்த போது கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதியன்று இந்தி நடிகையும், மாடல் அழகியுமான நடாஷா ஸ்டான்கோவிக்கை (செர்பியாவை சேர்ந்தவர்) மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அது முதல் இருவரும் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.
அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்கள்.
ஊரடங்கு காலத்தில் இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா, நடாஷாவுடன் இருக்கும் புதிய படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நடாஷா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அவர் அறிவித்து இருக்கிறார்.
இது குறித்து ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘நடாஷாவும் நானும் இணைந்து சிறந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கிறோம்.
தற்போது அது மேலும் சிறப்பாக அமைய உள்ளது. எங்கள் வாழ்க்கையில் புதிய உறவை விரைவில் வரவேற்க உற்சாகமாக இருக்கிறோம்.
எங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்துக்கு தயாராக இருக்கிறோம்.
அதற்காக உங்களுடைய ஆசிர்வாதத்தையும், வாழ்த்துகளையும் எதிர்நோக்குகிறோம்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் தந்தையாக போகும் செய்தியை அறிவித்து இருக்கும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவரது மனைவி நடாஷாவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, இந்திய அணி வீரர்கள் முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், மயங்க் அகர்வால் உள்பட பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.