TAMIL

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி சதத்தால் ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி தொடரையும் கைப்பற்றியது

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. பேர்ஸ்டோ (112 ரன்) சதம் அடித்தார்.

அடுத்து கடின இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 73 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்தது.

இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியுடன் இணைந்தார்.

இருவரும் நிலைத்து நின்று அடித்து ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றி காட்டினார்கள்.

மேக்ஸ்வெல் 108 ரன்களும் ( 90 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்), அலெக்ஸ் கேரி 106 ரன்களும் (114 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டம் இழந்தனர்.

இவர்கள் 6-வது விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.

சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் வீசிய அந்த ஓவரில் முதல் பந்திலேயே மிட்செல் ஸ்டார்க் சிக்சர் அடித்து பரபரப்பை குறைத்ததுடன் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டியடித்து அணி வெற்றிக் கோட்டை கடக்க உதவினார்.

ஆஸ்திரேலிய அணி 49.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது.

மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

அத்துடன் ஒரு நாள் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை குறைந்த பந்துகளில் (2,440 பந்து) கடந்த வீரர் என்ற சாதனையையும் மேக்ஸ்வெல் படைத்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

2015-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை இழப்பது இதுவே முதல்முறையாகும்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker