TAMIL
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்கும் திட்டத்துடன் விளையாடவில்லை – மைக்கேல் ஹோல்டிங்
கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்க வேண்டும் என்ற திட்டத்துடன் விளையாடவில்லை என்று வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு (2019) இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.
இந்திய அணி சந்தித்த இந்த தோல்வியால் பாகிஸ்தான் அணியின் அரைஇறுதி வாய்ப்பு பறிபோனது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் வெளியிட்ட தனது புத்தகத்தில் இந்த போட்டி குறித்து குறிப்பிட்டு இருந்தார்.
அதில், ‘இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தது. ரோகித் சர்மா, விராட்கோலி ஆட்டம் மர்மமாக இருந்தது.
வெற்றிக்கான வாய்ப்பு இருந்தும் டோனி அதிரடியாக ஆடுவதில் தீவிரம் காட்டாமல் ஒன்றிரண்டு ரன்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டியது ஏன்? என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை‘ என்று தெரிவித்து இருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சிக்கந்தர் பக்த் தனது டுவிட்டர் பதிவில், ‘உலக கோப்பை போட்டியில்
இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி
வேண்டுமென்றே தோல்வி கண்டது என்று நாங்கள் கணித்ததை பென் ஸ்டோக்ஸ்சும் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்‘ என்று குறிப்பிட்டு இருந்தார்.
‘எனது புத்தகத்தில் நீங்கள் சொல்லி இருக்கும் வார்த்தையை எந்த இடத்திலும் கண்டுபிடிக்க முடியாது‘ என்று பென் ஸ்டோக்ஸ் இதற்கு பதிலடி கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான அந்த லீக் ஆட்டம் குறித்து வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போதைய காலத்தில் மக்கள் புத்தகத்தில் எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள். ஏனெனில் புத்தகம் எழுதுகையில் தங்களது கருத்தை தெரிவிக்க மக்களுக்கு அதிகமான சுதந்திரம் உள்ளது.
அத்துடன் புத்தகத்தை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருக்கிறது.
கடந்த உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிக்கு முயற்சிக்கவில்லை என்று பென்ஸ்டோக்ஸ் முடிவுக்கு வந்ததை போல அந்த போட்டியை பார்த்த நிறைய மக்கள் முடிவுக்கு வந்து இருக்கமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.
இந்திய அணி வெற்றி பெறக்கூடிய ஆட்டமாக அது இருக்கவில்லை.
அந்த போட்டியில் இந்திய அணி தோற்க வேண்டும் என்ற திட்டத்துடன் விளையாடியது என்று யாரும் சொல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை.
அந்த ஆட்டத்தை பார்த்த எனக்கும் இந்திய அணி முழு திறமையையும் வெளிப்படுத்தாதது போல் தான் தெரிந்தது.
ஆனால் டோனியின் முகத்தில் காணப்பட்ட உணர்ச்சியை பார்க்கையில் அவர் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தான் விளையாடினார் என்பதை எனக்கு உணர்த்தியது.
எனவே இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டாம் என்று அணியாக முடிவு செய்து விளையாடினார்கள் என்று நான் நினைக்கவில்லை.
அந்த ஆட்டம் வாழ்வா-சாவா? போட்டியாக இருந்து இருந்தால் நாம் வித்தியாசமான ஆட்டத்தை பார்த்து இருக்க முடியும் என்று அவர் கூறினார்.