CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 326 ரன்னுக்கு ஆல்அவுட்
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மான் கில் 28 ரன்களுடனும், புஜாரா 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ஆஸ்திரேலிய பவுலர்கள் சரமாரி தாக்குதல் தொடுத்து இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். சுப்மான் கில் (45 ரன், 65 பந்து, 8 பவுண்டரி) கம்மின்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார். அவரது அடுத்த ஓவரில் புஜாராவுக்கும் (17 ரன், 70 பந்து) பந்து பேட்டில் முத்தமிட்டு விக்கெட் கீப்பர் பெய்னிடம் தஞ்சமடைந்தது.
இதன் பின்னர் கேப்டன் அஜிங்யா ரஹானேவும், ஹனுமா விஹாரியும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆடுகளத்தில் பந்து பவுன்சுடன் நன்கு சுழன்றும் திரும்பியது. ஆனாலும் அவற்றை திறம்பட சமாளித்து, ஒன்று, இரண்டு ரன் வீதம் எடுப்பதில் கவனம் செலுத்திய இவர்கள் ஸ்கோர் 116 ரன்களை எட்டிய போது பிரிந்தனர். விஹாரி 21 ரன்னில் (66 பந்து, 2 பவுண்டரி) வெளியேறினார்.
அடுத்து களம் கண்டு துரிதமான ரன்சேகரிப்பில் ஈடுபட்ட விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (29 ரன், 40 பந்து, 3 பவுண்டரி) ஆப்-சைடுக்கு வெளியே சென்ற பந்தை தேவையில்லாமல் அடிக்க முயற்சித்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி நடையை கட்டினார். அப்போது இந்தியா 5 விக்கெட்டுக்கு 173 ரன்களுடன் தடுமாற்றத்திற்குள்ளானது.
இதைத் தொடர்ந்து ரஹானேவுடன், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இணைந்தார். இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஆடியதுடன் கடைசி பகுதியில் தங்களது ஆதிக்கத்தையும் நிலை நாட்டினர். ரஹானே பக்கம் அதிர்ஷ்டக் காற்றும் வீசியது. புதிய பந்து எடுக்கப்பட்ட பிறகு மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ரஹானே 73 ரன்னில் இருந்த போது கொடுத்த சுலபமான கேட்ச் வாய்ப்பை ‘ஸ்லிப்’பில் நின்ற ஸ்டீவன் சுமித் நழுவ விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு அசத்திய ரஹானே பவுண்டரி அடித்து தனது 12-வது சதத்தை நிறைவு செய்தார். கடினமான சூழலில் அவரது கம்பீரமான பேட்டிங் இந்திய அணி முன்னிலை பெற உதவியது.
மறுமுனையில் தாக்குப்பிடித்த ஜடேஜாவும் அவருக்கு சூப்பராக ஒத்துழைப்பு தந்தார். ரஹானே 104 ரன்னில் இருந்த போது வழங்கிய மற்றொரு கேட்ச் வாய்ப்பை டிராவிஸ் ஹெட் கோட்டை விட்டார்.
இந்திய அணி 91.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் முன்கூட்டியே 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. முன்னதாக தேனீர் இடைவேளையின் போதும் மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 326 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன்ரஹானே 112, ஜடேஜா 57 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் லயன், ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளையும் , கம்மின்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்ஸ்சில் விளையாட உள்ளது.