TAMIL
ஆரம்ப காலத்தில் ரோகித் சர்மாவின் பேட்டிங் இன்ஜமாமின் ஆட்டத்தை நினைவூட்டியது – யுவராஜ்சிங் சொல்கிறார்
ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் 38 வயதான யுவராஜ்சிங் சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் ஜாலியாக கலந்துரையாடி வருகிறார்.
யுடியூப் மூலம் பேசிய யுவராஜ்சிங்கிடம், ‘தற்போதைய இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவை முதல் முறையாக இந்திய அணியில் பார்த்த போது அவரது ஆட்டம் குறித்து எந்த மாதிரி உணர்ந்தீர்கள்’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த யுவராஜ்சிங், ‘முதல்முறையாக இந்திய அணியில் அடியெடுத்து வைத்த போது ரோகித் சர்மா களத்தில் நிறைய நேரம் எடுத்துக் கொண்டு அதன் பிறகு அதிரடியாக விளையாடுவது போல் தெரிந்தது.
அவரது ஆட்டம் எனக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக்கின் பேட்டிங்கைத் தான் நினைவூட்டியது.
ஏனெனில் இன்ஜமாம் களம் கண்டதும் உடனடியாக வேகமாக ரன் எடுக்கமாட்டார்.
முதலில் எதிரணியின் பந்து வீச்சை சமாளித்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்.
பிறகு தான் தீவிர ரன் சேகரிப்பில் கவனம் செலுத்துவார்’ என்றார்.
2007-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன 32 வயதான ரோகித் சர்மா இதுவரை 224 ஒருநாள் போட்டிகளில் ஆடி 9,115 ரன்கள் சேர்த்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் விளாசிய ஒரே சாதனையாளர் ரோகித் சர்மா ஆவார்.
ரோகித் சர்மா டுவிட்டர் பக்கத்தில், ‘இந்திய அணிக்காக 17 ஆண்டுகள் விளையாடிய யுவராஜ்சிங்குக்கு சிறந்த முறையில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர்.
பாசமுள்ள சகோதரா’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு உடனடியாக பதில் அளித்துள்ள யுவராஜ்சிங், ‘என் மனக்கவலை உனக்கு தெரிந்துள்ளது சகோதரா. கிரிக்கெட்டில் நீ ஒரு ஜாம்பவானாக இருப்பாய்’ என்று புகழ்ந்துள்ளார்.
இதற்கிடையே, கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் ரூ.50 லட்சத்தை பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக யுவராஜ்சிங் அறிவித்துள்ளார்.