சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் வெற்றிக்கு யுஸ்வேந்திர சஹாலின் பந்துவீச்சுதான் முழுமையான காரணம் என ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
போட்டியில் ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணி 121 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்ததுடன், அரைச்சதம் கடந்த ஜொனி பெயார்ஸ்டோவ் களத்தில் இருந்தார். 164 ஓட்டங்கள் வெற்றியிலக்கு என்ற நிலையில், ஹைதராபாத் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டிருந்தது.
எனினும், போட்டியின் 16வது ஓவரையும், தன்னுடைய கடைசி ஓவரையும் வீசுவதற்காக அழைக்கப்பட்ட சஹால், பெயார்ஸ்டோவ் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இரண்டு முக்கிய துடுப்பாட்ட வீரர்களையும் ஆட்டமிழக்கச்செய்து, போட்டியின் வெற்றித்திசையை தங்கள் பக்கம் திருப்பியிருந்தார். அதன்படி, அணியின் வெற்றிக்கான காரணம் சஹால் என்பதை விராட் கோஹ்லி வெளிப்படுத்தியுள்ளார்.
“சாஹல் போட்டியின் வெற்றியை எமது பக்கம் திரும்பச்செய்தார். இன்றைய நாளில் (நேற்று) திறமை இருக்கும் பட்சத்தில் எதுபோன்ற ஆடுகளத்திலும் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும் என்பதை அவர் காட்டியுள்ளார். அவர் வருகைத்தந்து வீசிய கடினமான பந்துவீச்சுதான், என்னை பொருத்தவரையில் போட்டியை மாற்றுவதற்கான காரணம் என நினைக்கிறேன்” என கோஹ்லி குறிப்பிட்டார்.
அதேநேரம், சஹால் தன்னுடைய கடைசி ஓவரில் விராட் கோஹ்லி மற்றும் ஏபி.டி.வில்லியர்ஸ் ஆகியோருடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் கருத்துகளை பகிர்ந்துக்கொண்டார்.
“நான் என்னுடைய இறுதி பந்து ஓவர் முக்கியமானது என அறிந்துக்கொண்டேன். அத்துடன், இந்த ஓவரில் ஒன்று ஓட்டங்கள் விட்டுக்கொடுக்கப்படும் அல்லது விக்கெட்டுகள் விழும் என்பதை முடிவுசெய்து, நான் விக்கெட்டுகளை கைப்பற்ற முடிவுசெய்தேன்.
நான் பந்துவீச வரும் போது, தற்காப்பு முறையில் களத்தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், விராட் கோஹ்லியுடன் கலந்துரையாடி, எதிரணியை கட்டுப்படுத்தும் வகையில் களத்தடுப்பை அமைத்தால் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும் என முடிவுசெய்தோம். முதல் பந்தை வீசும் போது பந்து சுழல்வது தெரிந்தது. எனவே, நான் இடது ஸ்டம்பினை குறிவைத்து பந்துவீசினேன். அதன் மூலம் பெயார்ஸ்டோவின் விக்கெட்டினை வீழ்த்த முடிந்தது.
அதன் பின்னர் களம் நுழைந்த விஜய் சங்கர் தொடர்பில் அவதானம் செலுத்தினோம். வில்லியர்ஸ் மற்றும் கோஹ்லியுடன் கலந்துரையாடி கூக்லி பந்தினை வீச முடிவுசெய்தோம். நான் பயிற்சிகளில் இந்த பந்தினை அதிகமாக வீசியுள்ளேன். அதுமாத்திரமின்றி புதிய துடுப்பாட்ட வீரருக்கு இந்த பந்து கடினமாக இருக்கும் எனவும் நினைத்திருந்தேன். அதேபோன்று விக்கெட் வீழ்த்தப்பட்டது” என சஹால் தெரிவித்தார்.
இதேவேளை, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அறிமுகமாகியிருந்த டேவ்டுட் படிக்கல், மிகத்திறமையான வீரர் என்பதுடன், அவருடைய திறமைக்கு ஏற்ப, தன்னுடைய ஆட்டத்தில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாமல் தொடர்ந்தும் ஆட வேண்டும் என அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆரோன் பின்ச் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.