IPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
IPL2020 | ஐ.பி.எல் தொடரில் 8 அணிகளையும் வழிநடத்தப்போகும் கேப்டன்கள் யார்? அவர்களின் சாதனைகள் மற்றும் சம்பளம் எவ்வளவு?
நடப்பு ஐ.பி.எல். தொடரில் 8 அணிகளையும் வழிநடத்தப்போகும் கேப்டன்கள் யார்? அவர்களது சாதனை மற்றும் சம்பளம் எவ்வளவு? ஐ.பி.எல். தொடரை பொறுத்தவரை அதிக ஆண்டுகள் ஒரு அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர் யார் என்ற கேள்வி எழுந்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உச்சரிக்கும் பெயர் ஒன்றுதான். அவர் மஹேச்ந்திர சிங் தோனி..
2008 தொடங்கி 2019 வரை மொத்தம் 190 ஐ.பி.எல். போட்டிகளில் மஹேந்திரசிங் தோனி பங்கேற்றுள்ளார். 170 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இவர் 4,432 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 44.32. ஸ்டிரைக் ரேட் 137.85. இதுவரை 23 அரை சதங்கள் விளாசியுள்ள தோனி ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது சற்று சோகமான செய்திதான். சி.எஸ்.கே அணியை தொடர்ந்து வழிநடத்தி வரும் இவர் 3 முறை அந்த அணிக்காக கோப்பையை வென்று தந்துள்ளார். இவர் தலைமையிலான சி.எஸ்.கே. அனைத்து முறையும் லீக் புள்ளிப் பட்டியலில் டாப் 4-ல் ஒன்றாக இருந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு 2020 ஐ.பி.எல். தொடரில் தோனியின் சம்பளம் 15 கோடி ரூபாய்.
2008 முதல் ஐ.பி.எல். தொடரில் ரோஹித் சர்மா இடம்பிடித்திருந்தாலும் 2011-ம் ஆண்டு மும்பை அணிக்கு வந்த பிறகுதான் அவருக்கான ரசிகர் பட்டாளம் உருவாகத் தொடங்கியது என்றால் அது மிகையல்ல. 2013-ம் ஆண்டு முதல் அந்த அணியை இவர் வழிநடத்தி வருகிறார். 7 சீசன்களில் 4 முறை அணிக்கு கோப்பையை வென்று தந்து, அதிகமுறை கோப்பையை முத்தமிட்ட கேப்டனாக திகழ்கிறார். 183 போட்டிகளில் 4 ஆயிரத்து 898 ரன்கள் அடித்துள்ள ரோஹித்தின் பேட்டிங் சராசரி 31.6. ஆகும். நடப்பு தொடரில் இவர் சம்பளம் 15 கோடி ரூபாய்.
2008 முதல் ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் விராட் கோலி. 169 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 5 சதங்கள் உட்பட 5,412 ரன்களைக் குவித்துள்ளார். நடப்பு தொடரில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் இவர்தான். கோலியின் சம்பளம் 17 கோடி ரூபாய். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழும் விராட், ஐ.பி.எல். போட்டிகளில் ஒருமுறை கூட கோப்பை வெல்லாத கேப்டனாக இருக்கிறார்.
ஐ.பி.எல். தொடரில் தல தோனிக்கே கேப்டனாக இருந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். 2011 முதல் அந்த அணிக்காக விளையாடி வரும் இவர் 72 ஆட்டங்களில் 2022 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம் 8 அரை சதங்கள் இதில் அடங்கும். 2017-ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை இறுதிச்சுற்று வரை அழைத்துச் சென்றுள்ளார் ஸ்டீவன் ஸ்மித். நடப்பு ஐ.பி.எல். தொடரில் இவரது சம்பளம் 12 கோடி.
ஐ.பி.எல் தொடரில் கோப்பை வென்ற வெளிநாட்டு கேப்டன்களில் குறிப்பிடத்தக்கவர் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர். பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இவர் 126 போட்டிகளில் 44 அரைசதம் 4 சதம் உட்பட 4,706 ரன்கள் குவித்துள்ளார். 2016-ம் ஆண்டு மட்டும் 848 ரன்களை விளாசியுள்ளார். வார்னரின் சம்பளம் 12 கோடி.
கேப்டனாக முதல் ஐ.பி.எல். தொடரில் களமிறங்க உள்ளார் பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல். தோனியைப் போலவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தாலும் தொடக்க வீரராகவும், தேவை ஏற்படும் போது முக்கியமான 4-வது இடத்திலும் களமிறங்கி பொலந்து கட்டக்கூடியவர். இவரது பேட்டிங் சராசரி 42.06., ஐ.பி.எல். தொடரில் இவரின் சம்பளம் 11 கோடி ரூபாய்..
ஐ.பி.எல். தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கேப்டன்களில் ஒருவர் ஷ்ரேயாஸ் ஐயர். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான இவர், கடந்த சீசன் முதல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். 62 போட்டிகளில் 1681 ரன் அடித்துள்ள. இவரது சம்பளம் 7.40 கோடி.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் குறைந்த சம்பளம் வாங்குவது கொல்கத்தாவின் தினேஷ் கார்த்திக்தான். இவரது சம்பளம் 7 கோடி ரூபாய். 3-வது முறையாக கொல்கத்தா அணியை இவர் வழிநடத்த உள்ளார்.